தாபுங் ஹாஜி விசாரணையில் இரு முன்னாள் மூத்த அதிகாரிகள் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தாபுங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை குறித்து நடைபெறும் விசாரணையில், முன்னாள் தாபுங் ஹாஜி தலைவரும், முன்னாள் நிதி அமைச்சின் தலைமைச் செயலாளரும் ஆகிய இருவரையும் ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளது.

ஊழல் தடுப்பு ஆணையம் இன்று காலை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவரை காவலில் வைத்து விசாரிக்க (ரிமாண்ட்) அனுமதி கோரியது. அதற்கு மாஜிஸ்திரேட் எஸ்ரின் ஸக்கரியா(Ezrene Zakariah) அனுமதி வழங்கினார்

60 வயதுகளில் உள்ள இந்த இருவரும் நேற்று மாலை புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டனர்.

எட்ஜ் செய்தியின்படி, முன்னாள் தாபுங் ஹாஜி தலைமை நிர்வாக அதிகாரிக்கு (CEO) மேலும் நான்கு நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.

ஜூலை 29 அன்று வெளியிடப்பட்ட RCI அறிக்கை, தாபுங் ஹாஜியில் நிலவிய பரவலான நிர்வாகத் தோல்விகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. குறிப்பாக, முக்கியமான நிதி அபாயங்கள், அரசியல் தலையீடு மற்றும் முறையற்ற பரிவர்த்தனைகள் தொடர்பான பிரச்சினைகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டன.

ஊழியர்களுக்கான அதிக போனஸ்

தாபுங் ஹாஜி ஊழியர்களுக்கும், Tabung Haji Properties நிறுவனத்தின் இயக்குநர் குழுவினருக்கும் வழங்கப்பட்ட அதிகளவிலான போனஸ் தொகைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று ஆணையம் கண்டறிந்தது.

2010 முதல் 2017 வரை தாபுங் ஹாஜி மொத்தம் ரிம 367.7 மில்லியன் போனஸாக வழங்கியதாகவும், இந்தத் தொகை “மிகவும் அதிகமானது” என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

அரசியல் தலையீடு

2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், தலைவரையும் பல இயக்குநர் குழு உறுப்பினர்களையும் அரசியல்வாதிகளில் இருந்து நியமிக்க வழிவகுக்கும் பரந்த விதிமுறைகள் இருந்ததாக RCI கண்டறிந்தது.

தாபுங் ஹாஜியின் நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் ஈடுபட்டது, அரசியல் முரண்பாடுகள் காரணமாக பொதுமக்களிடையே அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியதாக அறிக்கை கூறுகிறது.

லாபப் பகிர்வு (hibah) வழங்குதல், ஹஜ் பயணக் கட்டணத்தை நிர்ணயித்தல், ஹஜ் நிதியுதவித் திட்டம் (Haj Financial Assistance Scheme) உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் அரசியல் காரணிகளால் பாதிக்கப்பட்டதாகவும் RCI தெரிவித்துள்ளது.

2017-இல் கடுமையான நிதி நெருக்கடி

மேலும், இஸ்லாமிய நிதி நிறுவனமான தாபுங் ஹாஜி 2017ஆம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது என்பதும் தெரியவந்தது.

அதன் சொத்துகள் மற்றும் பொறுப்புகளுக்கு இடையிலான பற்றாக்குறை (asset-liability deficit) 2014ஆம் ஆண்டிலேயே தொடங்கியிருந்தது என்றும் RCI அறிக்கை தெரிவித்துள்ளது.