சோங் சீ கிட், 47, 2030 ஆம் ஆண்டில் பரோலுக்கு (நன்னடத்தை அடிப்படையிலான முன்கூட்டிய விடுதலை) தகுதி பெறுவார். மேலும், தனது சிறைத் தண்டனையை முழுமையாக முடித்த பின்னர் அவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெல்போர்ன் கன்ட்ரி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் கேஹில், சாங் சீ கிட் பாதிக்கப்பட்ட பெண்ணை தனக்குச் சொந்தமான பொருளைப் போலப் பயன்படுத்தினார் என்று கூறினார்.
மலேசியாவைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவர், இந்தோனேசியப் பெண்ணை அடிமையாக நடத்தி, அவரைத் தாக்கிய குற்றத்திற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள நீதிமன்றத்தால் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
ஏபிசி நியூஸ் செய்தியின்படி, சோங் சீ கிட்(Chong Chee Kit) என்ற அந்த நபர், அந்தப் பெண்ணை வீட்டு வேலைகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதுடன், அவரைத் தாக்கிய குற்றத்திற்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
“நீங்கள் அவரை ஒரு அடிமையாக நடத்தினீர்கள். அதாவது, நீங்கள் சொந்தமாக வைத்திருந்த ஒரு பொருளைப் போல அவரைப் பயன்படுத்தினீர்கள்,” என்று நீதிபதி மைக்கேல் கேஹில் (Michael Cahill) கூறினார். சோங்கின் செயல்கள் இரக்கமற்றதும் கொடூரமானதுமாக இருந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
சோங் 2030ஆம் ஆண்டில் பரோல் பெறத் தகுதி பெறுவார். சிறைத்தண்டனையை முடித்த பிறகு அவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதம் நடைபெற்ற விசாரணையில், 2022 பிப்ரவரி முதல் அக்டோபர் வரை 60 வயதுகளில் உள்ள அந்தப் பெண்ணை அடிமையாக வைத்திருந்த குற்றத்தில் சோங் குற்றவாளி என ஜூரி தீர்ப்பளித்தது.
அவரது மனைவி ஆஞ்சி லியாவ்(Angie Liaw), அந்தப் பெண்ணை அடிமையாக வைத்திருக்க சோங்கிற்கு உதவியதாக அல்லது அவரை ஊக்குவித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இன்று நடைபெற்ற தண்டனை அறிவிப்பு விசாரணையில் அவர் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தம்பதியினர் இருவரும் 2023ஆம் ஆண்டு ஒன்றாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் அடிமைத்தனம் என்பது கூட்டாட்சி சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
2015ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தித்த பின்னர், சோங் அந்தப் பெண்ணுடன் “தாய்–மகன்” போன்ற உறவை ஏற்படுத்திக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு அந்தப் பெண் தம்பதியினருடன் வசிப்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். ஆனால், அந்தப் பெண்ணிடம் தெரிவிக்காமல் கணவனும் மனைவியும் மீண்டும் மலேசியா சென்றுவிட்டனர். இதனால் அந்தப் பெண் நான்கு ஆண்டுகள் வீடின்றி தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
2021ஆம் ஆண்டு தம்பதியினர் மீண்டும் மெல்போர்னில் இருப்பதாக அவரிடம் தெரிவித்ததுடன், ஒரு மாதத்திற்கு தங்களிடம் வேலை செய்யுமாறு அழைப்பு விடுத்தனர்.
2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லியாவ் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, அந்தப் பெண் தம்பதியினருடன் வசிக்க ஒப்புக்கொண்டார். அவர் ஒரு மாதம் மட்டுமே அங்கு தங்குவதாக இருந்தது.
குற்றங்கள் நடைபெற்ற காலகட்டத்தில் சோங் அந்தப் பெண்ணுக்கு உணவு மற்றும் முறையான மருத்துவ சிகிச்சையை மறுத்ததாகவும், அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, தூங்குவதற்கும் இடையூறு செய்ததாகவும் நீதிபதி கேஹில் கூறினார்.
“மிகச் சிறிய தவறுக்குக் கூட” சோங் அந்தப் பெண்ணைத் தாக்கியதாக நீதிபதி தெரிவித்தார். அவர் அந்தப் பெண்ணின் முகத்தில் உதைத்ததுடன், அவரது தலையைச் சுவரில் மோதியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பு தொடர்பான வீட்டு வாடகை மற்றும் மருத்துவமனைச் செலவுகளைச் செலுத்துவதற்காக, அந்தப் பெண்ணை தனது உறவினர்களிடம் கடன் வாங்கும்படி சோங் கட்டாயப்படுத்தியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2022 அக்டோபரில் அந்தப் பெண் சோங்கின் வீட்டிலிருந்து தப்பிச் சென்றார். பின்னர் பல நாட்கள் காணாமல் போன அவரை காவல்துறையினர் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னரே இந்தச் சம்பவம் குறித்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
அந்தப் பெண் 2024ஆம் ஆண்டு இயற்கையான காரணங்களால் உயிரிழந்தார்.
























