நஜீப் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தும் வரை காத்திருக்காமல், அந்தோணி லோக் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: துவான் இப்ராஹிம் வலியுறுத்தல்

பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக்கிற்கு அரசியல் வாக்குறுதிகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ரிம 50 மில்லியன் அபராதத்தைச் செலுத்தி முடிக்கும் வரை காத்திருக்காமல், அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நஜிப் காஜாங் சிறையிலிருந்து வெளியேறி வீட்டுக் காவலுக்குச் செல்லும் வரை லோக் காத்திருக்க வேண்டியதில்லை என்றும், போக்குவரத்து அமைச்சராக இருந்த தனது பதவியை ராஜினாமா செய்வதாக அளித்த வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வேண்டும் என்றும் துவான் இப்ராஹிம் கூறினார்.

நஜிப் இறுதியில் வீட்டிற்குத் திரும்புவாரா என்பதல்ல முக்கியமான கேள்வி; முன்னாள் பிரதமருக்கு கூடுதல் மன்னிப்பு வழங்கிய மன்னிப்பு வாரியத்தின் முடிவை லோக்கும் டிஏபியும் எதிர்த்திருந்தனர் என்பதே முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.

அவர்கள் நேர்மையுள்ள கட்சி என்று மக்கள் கருத வேண்டுமெனில், அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். நஜிப் வீட்டிற்குத் திரும்புகிறாரா இல்லையா என்பதைப் பார்க்க அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

“மன்னிப்பு வாரியம் தனது முடிவை எடுத்தபோது, லோக் அதற்கு எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்திருந்தார்,” என்று துவான் இப்ராஹிம் ஹராக்கவிடம் கூறினார்.

லோக்கின் ராஜினாமா

செப்டம்பர் 19 அன்று, மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் தான் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக லோக் அறிவித்தார்.

எனினும், நஜிப் வீட்டிற்குத் திரும்பும் வரை பதவியில் தொடருமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் தன்னைக் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

பின்னர், லோக் சிறப்பாகப் பணியாற்றி வருவதாக தான் கருதும் நிலையில், ஒரு அமைச்சரின் ராஜினாமா குறித்த விவாதம் ஊழல் என்ற பரந்த பிரச்சினையை விட அதிக கவனத்தைப் பெற்றுவிட்டதாக அன்வார் வருத்தம் தெரிவித்தார்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்

துவான் இப்ராஹிமைப் பொறுத்தவரை இந்த விவகாரம் அவ்வளவு சிக்கலானதல்ல.

நிபந்தனையுடனான மன்னிப்பில் விதிக்கப்பட்ட ரிம 50 மில்லியன் அபராதத்தை நஜிப் செலுத்த முடியுமா என்பது குறித்து ஊகிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

“இது ஒருவிதமான நாடகம்…” என்று அவர் குறிப்பிட்டார். அரசியலில் நேர்மை என்பது தவறு அல்லது ஊழல் தொடர்பான விஷயங்களில் மட்டும் இருக்கக்கூடாது; மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் அது உள்ளடக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நேர்மை என்பது ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பானது மட்டுமல்ல. அது வாக்குறுதிகளையும் உள்ளடக்கியது. மக்களிடம் பொய் சொல்லக்கூடாது.

“நீங்கள் ஒரு வாக்குறுதி அளித்திருந்தால், அதை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் ராஜினாமா செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தால், அதை நிறைவேற்றுங்கள். மக்கள் தீர்ப்பளிக்கட்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அன்வாரின் கருத்துக்கு துவான் இப்ராஹிம் எதிர்ப்பு

ஊழல்தான் மிகப் பெரிய பிரச்சினை என்ற அன்வாரின் கருத்தையும் துவான் இப்ராஹிம் கேள்விக்குட்படுத்தினார். யாராவது தவறு செய்ததாகக் கூறப்பட்டால், அரசு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

“உண்மையிலேயே ‘சாபு’ (தவறான முறையில் பணத்தைப் பயன்படுத்துதல்) முறைகேடு நடந்திருந்தால், அரசாங்கமாக நீங்கள் நடவடிக்கை எடுங்கள். யார் அதைச் செய்ததாகக் கூறப்படுகிறது? அனைவரையும் ‘சாபு’ செய்தவர்கள் என்று பொதுவாகக் குற்றம்சாட்ட வேண்டாம்.

“உண்மையில் வழக்கு இருந்தால், அதை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அம்னோவின் அழுத்தம்

இதற்கிடையில், அம்னோவும் இதேபோன்ற அழுத்தத்தை முன்வைத்தது.

அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் ரச்லான் ரஃபி, பக்காத்தான் ஹராப்பானின் வாக்குறுதிகளை மக்கள் கவனமாக ஆராய வேண்டும் என்று கூறினார். தேர்தலுக்கு முன்பு கூட்டணி பல வாக்குறுதிகளை வழங்குகிறது என்றும், ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை நிறைவேற்றுவதற்கு பல நிபந்தனைகள் சேர்க்கப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

வாக்குறுதிகளை வழங்குவதும், பின்னர் அந்த வாக்குறுதிகளை மீறுவதும் ஹராப்பாவுடன் இணைந்துபோய்விட்டது. வாக்குகளைப் பெறும்போது மக்களின் ஆதரவை வெல்ல அனைத்து விதமான இனிமையான வாக்குறுதிகளும் வழங்கப்படுகின்றன.

“ஆட்சியைப் பெற்ற பிறகு, அந்த வாக்குறுதிகள் நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன; அதற்கான காரணங்களும் தொடர்ந்து குவிகின்றன,” என்று ரச்லான் கூறியதாக அம்னோ இணைய செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னிப்பு வாரியம் நஜிப்புக்கு கூடுதல் மன்னிப்பு வழங்கிய மறுநாளே, லோக் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று டிஏபியின் மத்திய செயற்குழு முடிவு செய்தது. அதேவேளை, மற்ற டிஏபி அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.

அனைத்து டிஏபி அமைச்சர்களும் ராஜினாமா செய்தால், அன்வார் தலைமையிலான அரசாங்கத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படக்கூடும் என்று அப்போது லோக் கூறினார்.

நஜிப்பின் தண்டனை

SRC International தொடர்பான ரிம 42 மில்லியன் வழக்கில் சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் நஜிப் குற்றவாளி என 2022ஆம் ஆண்டு பெடரல் நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து, அவர் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

2024ஆம் ஆண்டு மன்னிப்பு வாரியம், அவரது ஆரம்ப 12 ஆண்டு சிறைத்தண்டனையை ஆறு ஆண்டுகளாகவும், ரிம 210 மில்லியன் அபராதத்தை ரிம 50 மில்லியனாகவும் குறைத்தது.

அவர் தனியான 1MDB வழக்கிலும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தண்டனை, அவரது SRC வழக்கின் தண்டனை முடிந்த பின்னர் தொடங்கும்; அவரது மேல்முறையீட்டுக்கு உட்பட்டது.