இராகவன் கருப்பையா – பாஸ் கட்சித் தலைவர் ஹாடியின் இனத்துவேசக் கருத்துகளுக்கு ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் உக்கிரமாக எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
அறுபது ஆண்டுகளுக்கும் மேல் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அவ்விரு கட்சிகளும் அண்மைய காலமாக தங்களுடைய சமூகத்தினரின் ஆதரவை இழந்ததற்கு இதுபோன்ற விஷயங்களும்தான் காரணம் என்று எல்லாருக்கும் தெரியும்.
அதாவது அம்னோவின் ஆதிக்கத்தில் தட்டிக் கேட்க வேண்டிய பல விஷயங்களை விட்டுக் கொடுத்து கடந்து சென்றதால் பெருமளவிலான விசுவாசிகளின் ஆதரவைக் கூட அவ்விரு கட்சிகளும் இழந்தன.
தற்பொழுது அதே போன்ற நிலைதான் மீண்டும் உருவாகியுள்ளது. ஆனால் இம்முறை ஹாடியின் இனவாதக் கருத்துகளுக்கு எதிராக அவ்விரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வாய்த்திறக்காமல் மவுனம் சாதிக்கின்றனர்.
அண்மையில் நடந்து முடிந்த 3 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் தேசிய முன்னணி மகத்தான வெற்றிகளை பதிவு செய்ததற்குக் காரணம் பாஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததுதான் என்று எல்லாருக்கும் தெரியும்.
வழக்கம் போல மலாய்க்காரர்களுக்கிடையே ஒற்றுமை, இனம், சமயம், போன்ற விஷ்யங்களை முன்னிறுத்திதான் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அந்த அலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தேசிய முன்னணி பயனடைந்தது.
ஆனால் ஹாடி, ஒரு படித் தாண்டி இனத்துவேசக் கருத்துகளை வெளியிட்டு ஆதரவு தேடினார். அவர் இப்படி நடந்து கொள்வதும் புதிதான ஒன்றல்ல. கடந்த காலங்களில் அவருக்கெதிராக பல புகார்கள் செய்யப்பட்டும் நடவடிக்கைதான் இல்லை.
கடந்த 15ஆவது பொதுத் தேர்தலிலிருந்து பாஸ் கட்சியின் பலம் ஓங்கியுள்ள நிலையில், அம்னோ மட்டுமின்றி, ம.இ.கா. மற்றும் ம.சி.ச.வுக்கும் ‘பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்,’ எனும் கதைதான்.
ஆக, மலாய்க்காரர் அல்லாதாரை தரம் தாழ்த்தி பேசிய ஹாடியை கண்டிக்களோ, அவருக்கு எதிராக புகார் செய்யவோ ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் முயற்சி மேற்கொள்ளாமல் போனதற்கு இதுதான் காரணம். அவரை பகைத்துக் கொள்ள அக்கட்சிகள் தயாராய் இல்லை.
தேசிய முன்னணியின் வழி, பாஸ் கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வரையில், ம.இ.கா.வுக்கும் ம.சீ.ச.வுக்கும் சொகுசான சூழல் நிலவுவது உறுதி. இதில் மாற்றுக் கருத்து இல்லை. நம் நாட்டின் அரசியல் அலை தற்போது இப்படிதான் இருக்கிறது.
ஹாடியின் கருத்தினால் பொது மக்கள்தான் கோபத்தில் கொந்தளிக்கிறார்களேத் தவிர அரசியல்வாதிகளுக்குக் கோபம் வரவில்லை. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,” எனும் சினிமா வசனத்திற்கு ஏற்ப கடந்து செல்கின்றனர். “யார் என்ன பேசினால் நமக்கென்ன?” எனும் நிலைப்பாட்டை போல் தெரிகிறது.
வாய்க்கு வந்தவாறு பேசிவிட்டு, “நான் அப்படி சொல்லவில்லை. தவறாகத் திரித்துவிட்டார்கள்,” என்று ஹாடி சமாதானம் சொல்ல முற்பட்டார். அது வெறும் சாக்கு போக்குதான் என மக்களுக்குத் தெரியாமல் இல்லை. அரசியல்வாதிகள் இப்படி பல்டியடிப்பதை காலங்காலமாக மக்கள் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
சரியான, சாதகமான, பொருத்தமான துணையைத் தேடிக் கொண்ட அம்னோ, அடுத்த பொதுத் தேர்தலிலும் பாஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்துதான் போட்டியிடும் எனும் நிலை உருவாகிவிட்ட சூழலில், தனது பங்காளிகளான ம.இ.கா.வையும் ம.சீ.ச.வையும் விட்டுவிடாமல் அணைத்து வைத்திருக்கும்.
எனவே ஹாடியோ மற்ற அரசியல்வாதிகளோ எப்படிப்பட்ட இனத்துவேசக் கருத்துகளை உமிழ்ந்தாலும் மவுனமாக இருந்து காரியத்தை சாதிப்பதா அல்லது கேள்வி எழுப்பி அவர்களை பகைத்துக் கொள்வதா எனும் சிக்கலில் அவ்விரு கட்சிகளும் உள்ளன.























