2027 பள்ளி உதவித்தொகையைப் பெற்றோர்கள் ஏன் நேரில் பெற வேண்டும்? – அன்வார் விளக்கம்

2027-ஆம் ஆண்டிற்கான பள்ளித் தொடக்கக்கட்ட நிதியுதவியான 200 ரிங்கிட்டைப் பெற்றோர்கள் நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என ஏன் வலியுறுத்தப்படுகிறது என்பது குறித்துப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் விளக்கமளித்துள்ளார். தங்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளைக் கண்காணிப்பதில் பெற்றோர்களும் பங்காற்றுவதை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெற்றோர்களுக்கும் பள்ளிகளுக்கும், குறிப்பாக ஆசிரியர்களுக்கும் இடையே நெருக்கமான உறவை ஊக்குவிப்பதே இதன் நோக்கமே தவிர, இந்த உதவித்தொகையைப் பெறுவதில் பெற்றோர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவது அல்ல என்றும் அன்வார் கூறினார்.

‘யாகின் மடானி பினாங்கு’ நிகழ்வில் பேசிய அவர், உங்கள் பிள்ளைகள் தினமும் ஆறு அல்லது ஏழு மணி நேரத்தை பள்ளியில் செலவிடும் போது, நீங்கள் வருடத்திற்கு ஒருமுறை பள்ளியில் ஒரு மணி நேரம் செலவிடுவதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமர் 200 ரிங்கிட் கொடுக்க விரும்புகிறார், ஆனால் பள்ளிக்கு வரச் சொல்லி நிலைமையைக் கடினமாக்குகிறார் என்று சில பெற்றோர்கள் புகார் கூறுகிறார்கள். இது போன்ற பெற்றோர்களைச் சமாளிப்பது கடினம், என்றும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளியின் சூழல் எப்படி இருக்கிறது, தங்களின் பிள்ளைகள் எவ்வாறு கற்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதும், பிள்ளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டறிய வேண்டும் என்பதுமே எனது நோக்கமாகும்.

இந்த 200 ரிங்கிட் உதவித்தொகை அனைத்துத் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்த அன்வார், இதற்கு முன்பு நடைமுறையில் இருந்தது போல் பெற்றோர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படாமல், அவர்கள் பள்ளிகளுக்குச் சென்று இதனை நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பள்ளிப் பாடங்களை முடிப்பதில் தங்களின் பிள்ளைகளுக்கு இருக்கும் பொறுப்புணர்வு உட்பட, அவர்களின் அணுகுமுறை, ஒழுக்கம் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆசிரியர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெறுவதற்கும் பெற்றோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பது ஆசிரியர்களின் பொறுப்பு மட்டுமல்ல, அதில் குடும்பங்களின் கவனமும் ஆதரவும் இருப்பதை உறுதி செய்வதற்குப் பெற்றோர்களின் பங்களிப்பு முக்கியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பெற்றோர்கள் ஆசிரியர்களைச் சந்தித்துத் தங்களின் பிள்ளைகளின் கல்வி குறித்துக் கலந்துரையாடுவதை ஊக்குவிக்கும் வகையில், 2027-ஆம் ஆண்டிற்கான பள்ளித் தொடக்கக்கட்ட நிதியுதவி பள்ளிகளில் விநியோகிக்கப்படும் என அன்வார் நவம்பர் 25-ஆம் தேதி அறிவித்திருந்தார்.

‘யாகின் மடானி பினாங்கு’ நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களின் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும் என்றும், சிறு வயதிலிருந்தே இனம் அல்லது மதம் பாராமல் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அன்வார் அறிவுறுத்தினார். மலேசியாவின் இன மற்றும் மதப் பன்முகத்தன்மையை ஒரு பலமாகப் பார்க்க வேண்டும் என்றும், இளம் மலேசியர்களுக்கு ஒருவருக்கொருவர் உள்ள வேறுபாடுகளை அறிந்து, மதித்து, ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

நாட்டின் நல்லிணக்கமும் ஒற்றுமையும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, இனக் குழுக்களுக்கு இடையிலான நல்லுறவைச் சிறு வயதிலிருந்தே வளர்க்க வேண்டும். “சமூகத்தில் பகைமையையும் சண்டைகளையும் தொடர்ந்து தூண்டிவிடுபவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்.

பினாங்கிற்கு ஒருநாள் பணி நிமித்தமாக வருகை தந்துள்ள அன்வார், இனம், மதம் மற்றும் வம்சாவளி வேறுபாடுகளைப் பகைமைக்கான காரணங்களாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் அறிந்து மதிக்குமாறே இஸ்லாம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்குக் கற்பிக்கிறது என்றும் தெரிவித்தார்.

 

 

 

-fmt