தீபகற்ப மலேசிய நுகர்வோரை விடச் சரவாக் நுகர்வோர் அதிக விலை கொடுத்து வருவதால், அங்கு நிலவும் கோழி, முட்டை மற்றும் மாட்டிறைச்சியின் அதிக விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு உறுதியளித்துள்ளார்.
மாட் சாபு என அழைக்கப்படும் முகமது சாபு, மாநில நுகர்வோர் கட்டுப்படியான விலையில் உணவுப் பொருட்களை வாங்குவதை உறுதிசெய்யச் சரவாக் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது முக்கியம் என்று கூறினார்.
எதிர்காலத்தில் குறிப்பாக இறைச்சி விலைகளைக் குறைப்பதற்குத் தீர்வு காண்பதற்காக நாங்கள் மாநில அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம், என்று சிபு மத்திய சந்தைக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்ட பிறகு அவர் கூறியதாக டி.வி.எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சரவாக்கில் காய்கறிகள் பொதுவாகக் கட்டுப்படியான விலையில் கிடைப்பதாகவும், சில சமயங்களில் தீபகற்ப மலேசியாவை விடக் குறைவான விலையிலேயே விற்கப்படுவதாகவும் முகமது சாபு தெரிவித்தார். மேலும், ‘அக்ரோ மடானி’ விற்பனைத் திட்டம் நாடு முழுவதும் இதுவரை 79 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான விற்பனையைப் பதிவு செய்துள்ளதுடன், இதன் மூலம் நுகர்வோருக்குச் சுமார் 25 மில்லியன் ரிங்கிட் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
நடப்புச் சந்தை விலைகளுடன் ஒப்பிடும்போது, இத்திட்டத்தின் கீழ் விற்கப்படும் பொருட்களின் மூலம் நுகர்வோருக்கு 10% முதல் 30% வரை பணம் மிச்சப்படுத்தப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பி40 (B40) பிரிவினர் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் வாங்குவதற்கு உதவும் முயற்சிகளில் இத்திட்டமும் ஒன்று என்று முகமது சாபு கூறினார்.
-fmt
























