மலேசிய இணையவழி விற்பனையாளரைத் தடுப்புப்பட்டியலில் சேர்க்கும் தாய்லாந்து

சுற்றுலா விசாவில் தாய்லாந்தில் தங்கியிருந்தபோது நேரலை ஒளிபரப்பு மூலம் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் கீ ஃபென் லி (Qi Fen Li) என்பவரைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தாய்லாந்துக்குத் திரும்பினால், கியூ ஃபென் லி (Qi Fen Li) என அடையாளம் காணப்பட்ட மலேசியப் பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தாய்லாந்து குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“Jae G” என்ற பெயரில் அறியப்படும் மலேசிய இணையவழி வர்த்தகப் பெண் ஒருவர், சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்குச் சென்றிருந்தபோது அனுமதியின்றி வேலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க தாய்லாந்து குடிவரவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

Qi Fen Li என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், நவம்பர் 19ஆம் தேதி தாய்லாந்துக்குள் நுழைந்து, நவம்பர் 28ஆம் தேதி மலேசியாவுக்குத் திரும்பியதாக அந்நாட்டின் குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது. இதனை Khaosod நாளிதழ் தனது ஆங்கில இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அனுமதியின்றி வேலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யவும், அவர் ஏற்கெனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால் கைது ஆணை கோரவும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அவர் மீண்டும் தாய்லாந்துக்குள் நுழைந்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும்  தெரிவித்தனர்.

தாய்லாந்தில் தங்கியிருந்தபோது, வேலை அனுமதி பெறாமல் நேரலை ஒளிபரப்பு மூலம் பொருள்களை விற்பனை செய்ததாக Qi மீது விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவரது நடவடிக்கைகள் வெளிநாட்டினர் வேலைவாய்ப்பு மற்றும் குடிவரவு தொடர்பான தாய்லாந்தின் சட்டங்களை மீறியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வணிக வளாகம் ஒன்றில் பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, Qi தாய்லாந்திலும் மலேசியாவிலும் விமர்சனங்களுக்கு உள்ளானார். பின்னர் மற்றொரு நேரலை ஒளிபரப்பின்போது தாய்லாந்து காவலரைக் குறிவைத்து ஆத்திரமூட்டும் கருத்துகளையும் அவர் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

அவரது கருத்துகளும் பொது ஒழுங்கு மற்றும் ஒழுக்கநெறி அடிப்படையில் தாய்லாந்துக்குள் நுழைய அவருக்குத் தடை விதிப்பதற்கான காரணங்களாக அமையக்கூடும் என்று குடிவரவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாய்லாந்தின் சட்டங்களை மீறும் வெளிநாட்டுப் பயணிகள் சட்ட நடவடிக்கைகளையும் நாடு கடத்தப்படும் நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்று குடிவரவுத் துறை பேச்சாளர் தெரிவித்தார்.