வடமாகாண அமைச்சர்கள் அறிவிப்பு; ஈபிஆர்எல்எப், பிளாட் எதிர்ப்பு

vigneswaran_and_sampanthanஇழுபறியில் இருந்து வந்த இலங்கை வடமாகாண அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அதன்படி, வடமாகாண சபையின் தவிசாளாராக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சி.வீ.கே.சிவஞானம், சபையின் பிரதித் தலைவராக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆன்டன் ஜெயநாதன், முதலமைச்சராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது வேட்பாளராகிய முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சராக, யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பி.ஐங்கரநேசன், கல்வி, கலாச்சார அமைச்சராக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தி.குருகுலராஜா, சுகாதார அமைச்சராக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வைத்திய கலாநிதி.பி.சத்தியலிங்கம், மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த டெலோ அமைப்பின் டெனீஸ்வரன், ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்றனர்.

பலசுற்றுப் பேச்சுக்களை நடத்திய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்களினால் உடனடியாக இறுதி முடிவெடுக்க முடியாமல் போயிருந்தது. இந்த நிலையில் புதனன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பீடமும், வடமாகாண முதலமைச்சரும் இணைந்து இறுதி முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விபரங்கள் வடமாகாண ஆளுனருக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அறிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் 14 உறுப்பினர்களும், ஈபிஆர்எல்எப் கட்சியின் சார்பில் 6 உறுப்பினர்களும் டெலோ அமைப்பின் சார்பில் 5 உறுப்பினர்களும், புளொட் அமைப்பின் சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஒரு உறுப்பினரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு போனஸ் இடம் வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினராகிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பொது வேட்பாளர் ஒருவர் என மொத்தமாக 30 பேர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களாக வடமாகாண சபையில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாவிடினும் பிரதித் தவிசாளர் பதவியிலிருக்கும் ஆன்டன் ஜெயநாதனுக்கு முக்கியமான துறைப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலதிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அயுப்அஸ்மீனுக்கும் அப்பொறுப்புக்களில் குறிப்பிட்ட விடயங்களில் பங்கேற்க வழிவகுக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதலமைச்சருடன் சேர்ந்து கடமையாற்றுவார்கள்.

முல்லைத்தீவு மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பது கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சுப்பதவிகள் மீள்பரிசீலனை செய்யப்படும் போது முல்லைத்தீவுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படுவதானது முன்னுரிமை பெறும் என்று வடமாகாண முதலமைச்சரினால் அமைச்சரவை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போருக்குப்பின்னரான சூழலை கருத்திற்க்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெற்றுள்ளது. ஆட்சித்திறனுக்கு அடிகோலுபவை தகைமையும் திறமையும் ஆவன. எமது மக்களின் நம்பிக்கையை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இவற்றையே அத்திவாரமாகக் கொண்டு தேர்வு நடைபெற்றுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

இந்த அமைச்சரவைப் பெயர்ப்பட்டியல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும் வடமாகாண முதலமைச்சரும் இணைந்து வெளியிடப்பட்ட பட்டியலே தவிர, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டதல்ல என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அந்த பெயர்ப்பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது கட்சிக்கு வழங்கப்படுகின்ற அமைச்சர் பதவியை பாதிக்கப்பட்ட பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவருக்கு வழங்குமாறு தாங்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்குத் தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறு செய்யாமல் அவர்கள் தமது விருப்பத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு அதனை வழங்கியிருப்பதை தமது கட்சிக்கு வழங்கியதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெயர்ப்பட்டியல் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட பிளாட் அமைப்பின் தலைவரும், மாகாண சபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், தேர்தல் நடந்து முடிந்ததும் நடைபெற்ற கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட முதலாவது கூட்டத்தில் நான்கு அமைச்சுக்களையும் சபையின் தலைவர் பதவியையும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்குக் கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோதிலும், அது படிப்படியாகக் குறைவடைந்து, இரண்டு அமைச்சுக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டு ஏனைய இரண்டையும் ஈபிஆர்எல்எவ், டெலோ கட்சிகளுக்கு வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

இது மாகாண சபையின் ஆரம்ப நடவடிக்கைக்கு அழகல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் ஒற்றுமைக்கும், ஒருங்கிணைந்த செயற்பாட்டிற்கும் அமோகமாக வாக்களித்துள்ள நிலையில், மாகாண சபையின் முக்கிய பொறுப்புக்கள் கட்சிகளிடையே பகிர்ந்தளிப்பதன் ஊடாகத்தான் அவர்களும் ஆர்வத்துடன் பங்களிக்க முடியும் என்றும், பதவியைப் பெறுவது முக்கியமல்ல என்றும் தெரிவித்தார்.

டெலோ அமைப்பின் தலைமைப்பீடம் இந்த அமைச்சரவைப் பட்டியல் பற்றி கலந்தாலோசிப்பதற்காக அவசரமாகக் கூடி ஆராய்ந்த பின்பே கருத்து எதனையும் தெரிவிக்க முடியும் என்று அந்தக் சட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் கூறினார். அவருடன் பிபிசி தமிழோசை தொடர்பு கொண்ட போது கட்சியின் தலைமைப்பீடம் கூடுவதற்குத் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். -BBC

TAGS: