தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதற்காகவே கிழக்கைப் பிரிக்கக் கோரினோம்! அமைச்சர் அதாவுல்லா

Athaullahகிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் அவரவர் கலாசார விழுமியங்களை சுதந்திரமாக அனுபவிக்க தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதனாலேயே கிழக்கை பிரிக்கக் கோரினோம். இவ்வாறு அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது,

கிழக்கு மாகாணத்தை யாரும் செதுக்கத் தேவையில்லை. இம்மாகாணம் இயற்கையாகவே அழகானது. அழகு நிறைந்த இந்த மாகாணம் அதற்குரிய கலை, கலாசார, பாரம்பரிய விழும்பியங்களுடன் தனித்துவமாக இயங்க வேண்டும்.

இம்மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் அவரவர் கலாசார விழுமியங்களை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும். அதனாலேயே கிழக்கை பிரிக்கக் கோரினோம்.

யதார்த்தங்களை நிலை நிறுத்துவதற்காக குரல் கொடுத்த எங்களைப் பார்த்து இனவாதிகள் என்றும் துவேசிகள் என்றும் சிலர் வசைபாடினர். அத்தகையவர்கள் யதார்த்தத்தின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு மௌனமாகி விட்டார்கள்.

திருகோணமலை மாவட்டம் பொருளாதார வளம் நிறைந்தது. பொருளாதார விருத்திக்கு கிழக்கின் தலைசிறந்த மாவட்டமாக திருகோணமலை உள்ளது. இருப்பினும் நிர்வாகத்துக்கான மாவட்டமாக மட்டக்களப்பும் உருவாக வேண்டும்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு போதிய நிதியிருக்கவில்லை. பல்வேறு நிர்வாகச் சிக்கல்களுக்கு இம்மாகாணம் முகம்கொடுத்தது. இன்று அவ்வாறு இல்லை. ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெயிக்கா, கொய்க்கா போன்ற நிதி உதவி வழங்கும் நிறுவனங்களினூடாக அபிவிருத்திக்காக நிதி கிடைக்கப் பெறுகிறது.

அதனால் இம்மாகாணத்தை இந்நாட்டின் சிறந்த மாகாணமாக கட்டியெழுப்புவதற்கு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து நிர்வாக அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

அரசியல் அதிகாரமும் நிர்வாக அதிகாரமும் ஒன்றிணைந்து செயற்படும் போதுதான் இந்த மாகாணத்தினதும் மக்களினதும் இலக்குகளை அடைய முடியும்.

ஒரு நாட்டினதோ அல்லது பிரதேசத்தினதோ மக்களினது விருத்திக்கு அவசியமானது சிறந்த வீதிக் கட்டமைப்பாகும். பொருளாதாரத்தின் முதுகெலும்பான போக்குவரத்துக்காக இன்று நாட்டின் பல பாகங்களிலும் பெருந்தெருக்கள் அமைக்கப்படுகின்றன.

அந்த வகையில் தனக்குக் கிடைத்த வீதி அபிவிருத்தி அமைச்சுப் பதவியினூடாக அமைச்சர் உதுமாலெப்பை பல வீதிகளை நிர்மாணித்துள்ளார். தான் பெற்றுக் கொண்ட பொறுப்பை எப்பாடு பட்டேனும் செய்து முடிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு செயற்படும் அமைச்சர் உதுமாலெப்பையின் பணிகள் பாராட்டத்தக்கது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

TAGS: