இலங்கையில் சர்வதேச விசாரணை கோருவேன் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்

cameronஇலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரன் கூறியுள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டுக்காக இலங்கை செல்லும் தருணத்தை பயன்படுத்தி அங்கு பல தரப்பட்டவர்களுடனும் இதனை தான் பேசுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள பிரதமரின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர்,” இலங்கை குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை ஒன்று நடக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாகக் கோரி வந்துள்ளோம். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. ஆகவே சுயாதீனமான ஒரு விசாரணை நடக்காத பட்சத்தில் அங்கு ஒரு சர்வதேச விசாரணை அவசியமாகின்றது என்று பிரதமர் நம்புகிறார்” என்று கூறியுள்ளார்.

அதேவேளை, பிரிட்டிஷ் பிரதமரைச் சந்தித்த லண்டன் வாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் பலரும், அவர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று கோரியிருக்கிறார்கள்.

ஆனால், லண்டனில் வெளியாகும் தமிழ் கார்டியன் பத்திரிக்கைகான கட்டுரை ஒன்றில் ”தாங்கள் எதிர்பார்ப்பது மாற்றத்தையே என்று கூறியுள்ள பிரதமர் டேவிட் கமரென் அவர்கள், காமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிப்பதால் அதனை அடைய முடியாது என்றும், இலங்கைக்கு சென்று அனைத்து சர்வதேச அவதானமும் அந்த நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஒரு நிலையைப் பயன்படுத்தி, ஒரு வெளிப்படையான கலந்துரையாடலை இந்த விடயங்கள் தொடர்பில் அங்கு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கைக்கு செல்லும் பட்சத்தில் வடக்கே யாழ்ப்பாணத்துக்கு பிரிட்டிஷ் பிரதமர் விஜயம் செய்ய வேண்டும் என்று தமிழர் பிரதிநிதிகள் அவரைக் கேட்டிருக்கிறார்கள். அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் டேவிட் கமெரன் அங்கு தான் செல்ல முயல்வேன் என்று கூறியுள்ளார்.

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது என்பது பிரிட்டிஷ் பெறுமானங்களுக்கு அல்லது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக ஆகாது என்றும், வெற்றிகொள்வதற்கான வழி அதுவே என்றும் டேவிட் கமரென் கூறியுள்ளார்.

TAGS: