லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம் இருந்த பானி வாலித் நகரின் பெரும்பகுதி, கடாபி எதிர்ப்பாளர்கள் வசம் வந்தது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், நேற்று முன்னறிவிப்பு எதுவுமின்றி, லிபியத் தலைநகர் டிரிபோலிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.
லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம், பானி வாலித், சிர்ட், சபா, ஜூப்ரா ஆகிய நகரங்கள் உள்ளன. கடாபி எதிர்ப்பாளர்கள் நாட்டைக் கைப்பற்றி இரு மாதங்கள் ஆகியும், இந்நகரங்கள் இழுபறியில் இருந்தன. பானி வாலித் நகர் மீது இருநாட்கள் முன், கடாபி எதிர்ப்பாளர்கள் வலுவான தாக்குதல் தொடுத்தனர்.
இதையடுத்து, நேற்று அந்நகரின் பெரும்பகுதிகள் அவர்கள் வசம் வந்தன. சில பகுதிகளில் மட்டும் கடாபி ஆதரவாளர்கள் உடனான சண்டை தொடர்கிறது. லிபிய வான்வெளி மீது விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையில் ஒரு பாதியை விலக்கிக் கொள்ள, ‘நேட்டோ’வுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை இடைக்கால அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தம், மால்டா நாட்டில் இம்மாதம் 13-ம் தேதி கையெழுத்தானது என போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் அன்வர் அல் பைட்டோரி தெரிவித்தார்.
போரில் காயம்பட்டவர்கள், பலியானவர்களைக் கொண்டு போவதற்கு இத்தடை விலக்கம் பயன்படும் என அவர் கூறினார்.