எதிர்கட்சியினரின் தொடர் போராட்டம் : தாய்லாந்தில் அவசர நிலை அமல்

thailandprotestபாங்காக்: தாய்லாந்தில், எதிர்கட்சியினரின் தொடர் போராட்டத்தால், அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்து முன்னாள் பிரதமர், தக் ஷின் ஷினவத்ரா. இவரது தங்கை, யிங்லக், தற்போது, தாய்லாந்து பிரதமராக உள்ளார். இவரது ஆட்சி, தக் ஷின் ஷினவத்ராவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, எதிர்க்கட்சியினர், புகார் தெரிவித்துள்ளனர். சகோதரனின் கைப்பாவையாக உள்ள யிங்லக், பதவி விலகக் கோரி, தலைநகர் பாங்காக்கில், இரண்டு மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பாங்காக்கில் உள்ள பல்வேறு அரசு அமைச்சகங்களை முற்றுகையிட்டு, எதிர்க்கட்சியினர், போராட்டம் நடத்துகின்றனர்.

எதிர்கட்சியினரின் தொடர் போராட்டத்தால், பார்லிமென்ட்டை கலைத்துள்ள பிரதமர், யிங்லக், அடுத்த மாதம், 2ம்தேதி, பொதுத்தேர்தலை அறிவித்துள்ளார்.ஆனால், இந்த தேர்தலை, எதிர்கட்சியினர் புறக்கணித்துள்ளனர். தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையில், இதுவரை, ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த, பிரதமர், யிங்லக், அவசரநிலையை அமல்படுத்தியுள்ளார்.
தலைநகர் பாங்காக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதையொட்டி, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு அதிகமாக கூடுவோரை விசாரணை இன்றி கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், “அரசின் இந்த உத்தரவை மதிக்கப்போவதில்லை, பிரதமர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்’ என, போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.