இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற வெளியாகியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தும் அக்கறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடையாது என இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அண்மையில் தீ்ட்டிய ஆசிரியர் தலையங்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவரது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் என்பன அவர் விமர்சனங்களை பொறுத்து கொள்ள தயாராக இல்லை என்பதை வெளிகாட்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் சிரேஷ்ட அதிகாரி நிஷா தேசாய் பிஸ்வாலின் இலங்கை விஜயம் மற்றும் எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட உள்ள இலங்கை சம்பந்தமான மூன்றாவது யோசனை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆசிரியர் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இலங்கையில் இரத்தம் சிந்திய சிவில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டறிய நம்பிக்கையானதும் சுயாதீனமானதுமான விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வொஷிங்டன் மீண்டும் முயற்சித்து வருகிறது.
இது குறித்து அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்த அமெரிக்க அரசின் சிரேஷ்ட பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி வைத்தமை காலத்திற்கு ஏற்ற செயற்பாடகும்.
போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அது தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
கொல்லப்பட்டவர்களின் அதிகளவானவர்கள் அரசாங்கத்தின் ஷெல் வீச்சு தாக்குதலிலேயே கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது. மாத்திரமின்றி அந்த விடயம் தொடர்பில் சர்வதேச சமூகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு தடையேற்படுத்தியது.
அரச படையினரும், தமிழ்ப் பிரிவினைவாத விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட போர் குற்றங்களை கண்டறியும் விசாரணைகளை நடத்துமாறு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இதுவரை இரண்டு யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால் இந்த இரண்டு யோசனைகளையும் இலங்கை அரசாங்கம் புறந்தள்ளியுள்ளது. இவ்வாறான மூன்றாவது யோசனை ஒன்றை கொண்டு வரும் அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையிலேயே தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்தது.
போர் முடிந்து 5 வருடங்கள் கழிந்துள்ளதால், பொறுப்புக் கூறும் விடயம் தொடர்பில் விடுக்கப்படும் இந்த கோரிக்கையை மறந்து விட உலகத்திற்கும் அமெரிக்காவுக்கும் சிரமமான காரியமல்ல.
ஆனால் அப்படி மறந்து விடுவது அனர்த்தமான நிலைமையை ஏற்படுத்தும். காரணம் பொறுப்புக் கூறல் இன்றி மாபெரும் மனித படுகொலைகளை நிகழ்த்த தமக்கு அனுமதி கிடைத்திருப்பதாக அவர்கள் நினைக் கூடும்.
ராஜபக்ஷவின் எண்ணத்தையும், நோக்கத்தை உணர்ந்து கொள்ள முடியாதளவில் எவரும் வலு குறைந்தவர்கள் அல்ல. முறையான விசாரணைகளை நடத்துவதில் அவர்களுக்கு அக்கறையில்லை.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அவர்கள் விமர்சனங்களை பொறுத்து கொள்ள தயாரில்லை என்பதை காட்டுகிறது.
இந்த நிலையில், சர்வதேச அழுத்தங்கள் காரணமாக விருப்பமின்றியேனும் இலங்கை அரசாங்கம் சில தீர்மானங்களை எடுத்துள்ளது என்பது உண்மையே.
பல வருடங்களாக அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டு வந்த, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாண சபைக்கு கடந்த செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டமை இதற்கான உதாரணமாகும்.
தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை போர் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையை நிறைவேற்றியது.
போரில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முழுமையான பொறுப்புக் கூறலை கோரி நிற்கும் இலங்கையர்களுடன் சர்வதேசமும் அணித்திரள்வது முக்கியமானது என அந்த ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.