10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை : ஐ.நா

சிரியாவின் துறைமுக நகரான லடாகியாவில் நான்காவது நாளாக நேற்றும் சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அந்நகரில் இருந்து வெளியேறிய 10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

லடாகியாவில் நேற்று சிரிய இராணுவமும் கடற்படைப் படகுகளும் இணைந்து கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தியதில் ஐவர் கொல்லப்பட்டனர். சிரியாவுக்குள் வெளிநாட்டுப் பத்திரிகை நிருபர்களுக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதால் அங்கு என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை என கூறப்படுகிறது.

லடாகியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஐ.நா. நிவாரண நடவடிக்கைகள் குறித்த செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோபர் கின்னஸ் கூறுகையில், “லடாகியாவில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்த 10 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இராணுவத் தாக்குதல் காரணமாக கடந்த 15-ம் தேதி அங்கிருந்து வெளியேறினர். தற்போது அவர்கள் எங்குள்ளனர் எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், துருக்கி வெளியுறவு அமைச்சர் அகமது டவுடொக்லு வெளியிட்ட அறிக்கையில், “சிரியா தன் மக்கள் மீதான வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். இது சிரியாவுக்கு துருக்கி விடுக்கும் இறுதி எச்சரிக்கை” என தெரிவித்துள்ளார்.

அதேநேரம், “சிரியாவில் நடப்பவை அதன் உள்நாட்டு விவகாரம். இதில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டியதில்லை. அப்படி தலையிட்டால் பிரச்னைகள் மேலும் அதிகமாகும்” என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேமன்பரஸ்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.