கே.பி-யின் நிதிப் பொறுப்பாளரை கைது செய்ய நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத முகவர் குமரன் பத்மநாதனின் (கேபி) நிதிப் பொறுப்பாளரை கைது செய்வதற்கு இலங்கை அரசு, இன்டர்போலின் (அனைத்துலக காவல்துறை) உதவியை கோரியுள்ளது.

குமரன் பத்மநாதனின் நிதிப் பொறுப்பாளர் பொன்னையா ஆனந்தராஜாவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபரை கைது செய்யுமாறு இன்டர்போலுக்கு நீதிமன்றம் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள ஓர் கணக்காய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மற்றுமொரு சந்தேக நபரான சுப்பிரமணியம் சிவகுமார் என்பவரை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

TAGS: