கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

ramadasபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’இலங்கையில் இராணுவத்தினரின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல், அகதிகளாக தப்பி வந்த 10 ஈழத் தமிழர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சம் தேடி வந்தவர்களை காவல் துறை இரக்கமின்றி கைது செய்து சிறை வைத்திருப்பது ஒருபுறம் வருத்தமளிக்கும் நிலையில், இன்னொரு புறம் அவர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் மிகுந்த வேதனை தருகின்றன. ஈழத்தமிழர்களின் துயரம் இப்போதைக்கு தீராதா? என்ற ஏக்கமும், வேதனையும் தான் ஏற்படுகின்றன.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். இது தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் தலைமையிலான குழுவின் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் இலங்கை அரசு மீண்டும் தமிழ் இளைஞர்களை தேடிப் பிடித்து சுட்டுக் கொல்லத் தொடங்கியிருக்கிறது.

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான உலகத்தின் கண்டனங்களையெல்லாம் கண்டு கொள்ளாத இலங்கை அரசு, அந்த நாட்டில் மீதமுள்ள தமிழர்களையும் கொன்றொழித்துவிட்டு முழுமை யான சிங்கள தேசத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

இவ்வளவுக்கு பிறகும் இலங்கையிடம் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பது எவ்வகையிலும் பயனளிக்காது. இனப் படுகொலை முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், உலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களிலிருந்து இலங்கையை பாதுகாத்ததுடன், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்தியா பாதுகாத்து வருகிறது.

அதன்விளைவாகத் தான் தங்களைத் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற துணிச்சலில் சிங்கள ஆட்சியாளர்கள் மீண்டும் இனப்படுகொலையை தொடங்கியுள்ளனர். இதைத் தடுக்காவிட்டால் இலங்கையில் தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும்.

எனவே, இலங்கை தொடர்பான அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அங்கு தமிழர்கள் கொல்லப்படு வதையும், கொடுமைப் படுத்தப்படுவதையும் தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தஞ்சம் தேடி வந்த ஈழத் தமிழர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் தவறான அணுகு முறையை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் வழங்கப்படுவது போன்ற சலுகைகளை தமிழ் அகதிகளுக்கு இந்தியா வழங்க வேண்டும். மேலும், கைது செய்யப்பட்ட அகதிகளில் 5 பேர் குழந்தைகள் என்பதாலும், அவர்களால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் அவர்கள் 10 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

TAGS: