உண்மை கண்டறியும் புதிய குழுவை சிறிலங்கா அனுப்புகிறார் நவநீதம்பிள்ளை

navaneetham-pillai1சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் சிறப்பு ஆணைபெற்ற பிரதிநிதிகளின் புதிய குழுவொன்றை விரைவில் அனுப்ப ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளார்.  இதுதொடர்பான தகவல், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தில், இருந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முறைப்படியான அறிவிப்பு இந்தவாரம் கிடைக்கும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அதேவேளை, புலம்பெயர்ந்தோர் தொடர்பான ஐ.நா சிறப்புப் பிரதிநிதி இம்மாதம் 19ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருடன் ஒத்துழைக்க முடியாது – சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துடன் ஒத்துழைக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை வைத்துள்ள அமைப்புகள் சில விடுத்த வேண்டுகோளை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.  கடந்தவாரம், சிறிலங்கா அதிபரைத் தனித்தனியாகச் சந்தித்துள்ள இந்த அமைப்புகள், ஜெனிவா தீர்மானத்தின் விளைவாக எழக்கூடிய சூழ்நிலைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளன.

rajapaksaஇதன்போதே, அனைத்துலக விசாரணை அழுத்தங்களைக் குறைப்பதற்கு, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துடன் ஒத்துழைக்குமாறு இந்த அமைப்புகள் கோரியிருக்கின்றன.

ஆனால், அதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச,

“நாம் எதற்கு ஒத்துழைக்க வேண்டும்?

எல்லோருமே எம்மால் வெல்ல முடியாது என்று கூறிய போரை நாம் வென்றுள்ளோம்.

பல தியாகங்களைச் செய்தே போரில் வெற்றி பெற்றுள்ளோம்.

போரை வழிநடத்தியவர்களை அனைத்துலக விசாரணை நீதிமன்றில் நான் நிறுத்துவது எளிதானது.

ஆனால் அதற்கு நான் தயாரில்லை” என்று தெரிவித்துள்ளார் .

அதிகாரப் பகிர்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“அதிகாரப்பகிர்வு தொடர்பாக பங்காளர்களுடன் பேச்சுக்களை நடத்தி, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.

ஆனால், அதிகாரப் பகிர்வு தொடர்பான முடிவுகள் நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலமாகவே எடுக்கப்பட வேண்டும்.

கட்சி ரீதியான எந்த செயல்துமுறைளுக்கும் செல்லவோ, நாட்டின் இறைமையை விட்டுக் கொடுக்கவோ, போர் வீரர்களைக் கொலைக்களத்துக்கு அனுப்பவோ நான் தயாராக இல்லை” என்றும் அவர் கூறியுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

TAGS: