தொடரும் முள்ளிவாய்க்கால் பீதி! மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடமும் விசாரணை!!

ravikaran_003கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவரென இலங்கை அரசு நிறுவ முற்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை புலிகளுடன் தொடர்பு இருக்கிறதா எனக் கேட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மே-18 ஆம் திகதி நினைவுகூரப்படவுள்ள நிலையில் அதனைத் தடுத்து நிறுத்த முன்னெடுக்கப்பட்ட ஓர் அச்சுறுத்தலே தன்னிடம் இடம்பெற்ற விசாரணை என ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பிற்பகல் 3.45 மணியளவில் என்னுடைய வீட்டிற்கு 4 நபர்கள் வந்தனர். என்னை விசாரிக்கப் போகின்றனர் எனக் கூறினார்கள். நான் அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் எனக் கூறினேன். உடனடியாகவே அவர்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்வி நீ புலியா என்பதுதான்” – என்று ரவிகரன் தெரிவித்தார். “மேலும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறாயா என்றும் கேட்டார்கள். பயங்கரவாதிகள் என்றால் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என நான் அவர்களிடம் கேட்டேன். “என்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்து நான் ஒரு மாகாணசபை உறுப்பினர் என அடையாளப்படுத்திக் கொண்டேன். பின்னர் வந்தவர்களிடம் உங்களை அடையாளப்படுத்துங்கள் என கேட்டேன்.

ஒருவர் ‘ரி.ஐ.டி’ என குறிக்கப்பட்டிருந்த அடையாள அட்டையும் மற்றையவர் ‘பொலிஸ்’ என குறிக்கப்பட்டிருந்த அடையாள அட்டையும் வைத்திருந்தார்கள்”- எனவும் ரவிகரன் கூறினார். “பின்னர் என்னுடைய அடையாள அட்டையின் இலக்கத்தைப் பதிவு செய்தனர். பின்பு வீட்டிலிருந்தவர்களது அடையாள அட்டை இலக்கங்கள் மற்றும் பெயர், விவரங்களை பதிவுசெய்து கொண்டு சென்றார்கள். மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்வார்கள் எனக் கூறிச் சென்றிருக்கின்றார்கள்” – எனவும் அவர் தெரிவித்தார்.

Banner

TAGS: