சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக கிளர்ச்சி நடந்து வருகிறது.
அந்நாட்டு இராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக நடந்து வரும் உள்நாட்டு போரில் இதுவரை ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
அசாத்தின் ஆதரவு படையினர் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், சிரியாவில் நிலவி வரும் கொடிய நிலையை, மனித உரிமை மீறலை சர்வதேச கிரிமினல் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல ஏதுவான தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்டது. பிரான்ஸ் கொண்டு வந்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன.
ஆனால் சிரியாவின் நட்பு நாடான ரஷ்யாவும், சீனாவும் தங்கள் வீட்டோ உரிமையை பயன்படுத்தி விட்டன. இதனால் தீர்மானம் நிறைவேறாமல் தோல்வி கண்டது.
சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது ரஷ்யா தனது மறுப்பு ஓட்டு உரிமையை பயன்படுத்தி இருப்பது இது நான்காவது முறையாகும்.
வாக்களிப்பின் பின்னர் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் பேசும்போது,
‘‘இந்த பூமியில் அமைந்துள்ள நரகத்தில் (சிரியாவில்) வாழுகின்ற மக்களுக்கு நீதி வழங்குவதில் நாம் எப்படி தோற்றுப்போனோம் என்று நமது பேரக்குழந்தைகள் இப்போது முதல் இனி வருங்காலத்திலும் நம்மிடம் கேள்வி கேட்பார்கள்’’ என வேதனையுடன் குறிப்பிட்டார்.