ஆப்கானுக்கு ரகசிய விஜயம் செய்த ஒபாமா

obama_afghanistan_visit_003ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் விரைவில் வெளியேறவுள்ள நிலையில், ஜனாதிபதி பராக் ஒபாமா திடீரென ரகசிய விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வாஷிங்டனில் இருந்து சனிக்கிழமை மாலை அமெரிக்க விமானப்படை விமானத்தில் புறப்பட்ட அவர், ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானப்படை தளத்தை நேற்று சென்றடைந்தார். அவருடன் பிரபல பாடகர் பிராட் பைஸ்லியும் வந்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு ஒபாமா விஜயம் செய்வது இது நான்காவது முறையாகும். 2012ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாக பதவியேற்ற பிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணம் இதுவாகும்.

தலிபான் தீவிரவாதிகளின் மிரட்டல் இருப்பதால், ஒபாமாவின் பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பக்ராம் விமானப்படை தளத்துக்கு ஒபாமா வந்த சில நிமிடங்களுக்கு பிறகே, இந்த தகவல் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய்க்கு தெரிவிக்கப்பட்டது.

பக்ராம் விமானப்படை தளத்தில் சில மணி நேரம் தங்கியிருந்து விட்டு, பின்னர் தீவிரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களை ஒபாமா சந்திக்க திட்டமிட்டுள்ளார்.