70- 80களில் தமிழர்களுக்கு நடந்தது இன்று முஸ்லிம்களுக்கு நடக்கிறது: செ.கஜேந்திரன்

gajen77- 83 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி இன அழிப்பினை ஆரம்பித்த அரசு இன்று முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களை ஆரம்பித்து அவர்களை அழிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அளுத்கம தர்காநகர் மற்றும் பேருவளையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ் பேருந்து தரிப்பிடத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவித்ததாவது :-

”களுத்தறையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் முஸ்லிம் தேசிய இனத்திற்கு எதிரான இனசுத்திகரிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாத அரசாங்கத்திற்கு எதிராக போராடினால் மாத்திரமே நாம் இங்கு வாழமுடியும்.
முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் மற்றும் இனவாத செயற்பாடுகளுக்கு உள்ளுரில் பேசி தீர்வு காணமுடியாது.

இலங்கைத் தீவில் தமிழ்- முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் மாற்றமடைந்துள்ள சர்வதேச நிலைமைகைளச் சாதகமாகப் பயன்;படுத்தி சர்வதேசத்தின் துணையுடன் இனவாதமற்ற ஒரு புதிய அரச கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதன்போதே சிறுபான்மை மக்கள் நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழும் சூழல் ஏற்படும்.

அளுத்கம தர்கா நகர்- பேருவளைச் சம்பவங்களை நாம் வெறுமனே பொதுபல சோனாவினாலோ அதன் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரினாலோ உருவானதாக பார்க்க முடியாது.

இந்த சம்பவங்களை திட்டமிடப்பட்ட ஒரு இனவாத இன அழிப்பு நடவடிக்கையின் ஆரம்பமாகவே பார்க்கின்றோம். இதற்கு பின்னணியில் அரசாங்கத்தை ஆட்டிவைக்கும் கடும் இனவாத பௌத்த தரப்பினர் மும்முரமாக செயற்படுகின்றனர்.

77 ஆம் 83 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீதும் இதேபோல் ஒரு தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. அப்போது அது இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் என இலங்கை அரசு குறிப்பிட்டது. ஆனால் அது தமிழர்களின் இன அழிப்பாக மாறி இன்று பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் பலகோடி ரூபா சொத்துக்களையும் அழித்து முள்ளிவாய்காலில் முடிவுற்றுள்ளது.

அன்று தமிழர்கள் மீது எவ்வாறு இன அழிப்பிற்கான முதல்கட்ட இனவாத செற்பாடுகளை அரசாங்கம் ஆரம்பித்ததோ- அதேபோன்றே இன்று முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளது.

எனவே சர்வதேச மத்தியஸ்தத்துடன் தமிழ் பேசும் மக்கள் இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கினால் மட்டுமே இங்கு தமிழ் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.

இதனால் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் அதற்கான வாய்ப்புக்களைப் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இந்த பிரச்சினையின் நோக்கத்தினையும்- பின்னணியினையும் சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் ஜனாதிபதியுடன் பேசுகிறோம்- சாமாதானக் குழுக்களை அமைக்கின்றோம் என்று அறிக்கைகளை விடுவது- ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கியுள்ளார் என்று கூற முற்படுவது- பொதுபலசேனா தான் இதற்கு காரணம் அதன் தலைவரைக் கைது செய்யவேண்டும் என கோருவது இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதில்லை.” என்றும் கூறினார்.

TAGS: