1983ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை தொடர்பான நினைவுகள் இன்னும் மறையவில்லை என்று பிரித்தானிய தொழிற்கட்சி தலைவர் எட்வேட் மில்லிபேன்ட் தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டு இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் வன்முறையால் கொல்லப்பட்டனர். அதன் நினைவுகள் இந்;த மாதத்தில் நினைவுகூரப்படுகின்றன.
இந்த வன்முறைகளில் எத்தனை உயிர்கள் பலியாகின என்பது யாருக்கும் தெரியாது. எனினும் அதன் நினைவுகள் இன்னும் அழியவில்லை. அத்துடன் அதனை நாம் மறக்கவும் முடியாது என்றும் மில்லிபேன்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் இறுதிப் போரில் இரண்டு தரப்புகளும் மேற்கொண்ட போர் மீறல்கள் தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளமையை அவர் வரவேற்றுள்ளார்.
இந்தநிலையில் குறித்த யோசனையை நிறைவேற்றுவதற்கு தாம் பிரித்தானிய பிரதமருக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப் போவதாகவும் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படும் என்றும் மில்லிபேன்ட் குறிப்பிட்டுள்ளார்.