ஒருங்கிணைந்த இலங்கைக்குள்தான் தீர்வு”: இரா. சம்பந்தன்

sambanthanஒருங்கிணைந்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையைச் செழுமைப் படுத்தக்கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், கடந்த 23ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இன்று தமிழக பாரதீய ஜனதாக்கட்சியின் பிரதிநிதிகளை, கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனும் சுமந்திரனும் சந்தித்து பிரதமரிடம் பேசிய விவகாரங்கள் குறித்து விளக்கினர்.

இந்தச் சந்திப்பில் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் இடம்பெற்றனர். இதற்குப் பிறகு சம்பந்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சம்பந்தன், பிரதமர் மோதியைச் சந்தித்தபோது பேசிய விவகாரங்கள் குறித்து விளக்கினார். 13வது சட்டத்திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்; அதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று கோரியதாகவும், இந்தச் சந்திப்பு திருப்தி அளித்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சனையைப் பொறுத்தவரை, ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வையே தாங்களும் உலக நாடுகளும் இந்தியாவும் விரும்புவதாகத் தெரிவித்தார்.

“வடக்கு – கிழக்கை இணைக்க வேண்டும்”

தமிழர்கள் வசிக்கும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பைப் பொறுத்தவரை, அதிபர் ராஜபக்சே தங்களிடம் கூறியபடி செயல்படவில்லை என்று குறிப்பிட்டார். வடக்கு – கிழக்கு மாகாணங்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

இனப் பிரச்சனை குறித்துப் பேசித் தீர்க்க அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் தமிழ்த் தேசிய பிரதிநிதிகள் இடம்பெற வேண்டுமென கோரும் நிலையில், அதில் இடம்பெற மறுப்பது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இனப்பிரச்சனைக்குத் தீர்வாக தாங்களும் எதிர்க்கட்சிகளும் விவாதித்து ஒரு தீர்வை முன்வைத்தால், அரசு அதனை விவாதித்து ஏற்க முன்வர வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் தேர்வுக்குழுவில் இணையத் தயாராக இருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

மலையகத் தமிழர் பிரச்சனை உள்பட பிற சிறுபான்மையினர் குறித்தும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், பிரதமருடனான சந்திப்பின்போது இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லையென்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழக மீனவர் பிரச்சனை என்பது இரு மத்திய அரசுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றும், இருதரப்பு மீனவர்களும் இணைந்து பேசி இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண வேண்டுமென்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார். -BBC

TAGS: