தனக்குத் தானே ஆப்பு வைக்கும் அரசாங்கம்

mahinda_sad_00213ஆவது திருத்தச்சட்டத்தின் பற்களைப் பிடுங்கும், அரசாங்கத்தினதும், சிங்களத் தேசியவாதிகளினதும் நடவடிக்கைகளே, தமிழர்களுக்கு வலுவான அதிகாரப்பகிர்வு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தும் கருவிகளாக மாறத் தொடங்கியுள்ளன.

13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள், குறைக்கப்படுவதும், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதும், இந்தியாவை விசனம் கொள்ள வைத்துள்ளது என்றே தெரிகிறது.

அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தபோது, இதனை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக, மாகாண பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பானது அதிகாரப்பகிர்வு செயல்முறைக்கு முரணானது என்று புதுடில்லி கருதுவதாக, சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.

தாம் இந்தியாவுக்கு எடுத்துக் கூற முன்னரே, 13ஆவது திருத்தச்சட்டத்தின் நிலை குறித்து, இந்த தீர்ப்பின் மூலம், இந்தியா உணர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

முதலமைச்சருடன் கலந்தாலோசித்தே பிரதம செயலாளரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்று அரசியலமைப்பு கூறுகின்றது. ஆனால், வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமன விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவ்வாறு செயற்படவில்லை.

இந்தநிலையில், பிரதம செயலாளருக்கு முதலமைச்சர் உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள குறைபாடுகளையும், அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதில் அதன் பலவீனத்தையும், இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகள் இதற்கு முன்னரும் வெளிப்படுத்தியுள்ளன.

ஏற்கனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட முறையைத் தவறு என்று உயர்நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம், ஒருங்கிணைந்திருந்த இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன. அதுவும், கூட இந்தியாவுக்கு திருப்தி தரும் ஒன்றாக இருக்கவில்லை. இந்த இரண்டு வழக்குகளிலும் அரசாங்கம் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கவில்லை.

ஆனால், சிங்களத் தேசியவாத நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், தொடுக்கப்பட்ட இந்த வழக்குகளுக்கு அரசாங்கத்தினதும், சிங்கள அடிப்படைவாதிகளினதும், முழு ஆதரவு வழக்குத் தொடுநர்களுக்கு இருந்து வந்தது என்பதை மறுக்க முடியாது.

இந்த இரண்டு வழக்குகளிலும், மனுதாரர்கள் தரப்பில் வாதாடியவர் சட்டநிபுணரும், அதிதீவிர சிங்களத் தேசியவாதியுமான கோமின் தயாசிறி என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்ற அரசாங்கத்தின் பிடிவாதமும் கூட, அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசாங்கத்தின் சுயரூபத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், இனப்பிரச்சினையைத் தீர்த்து விடலாம் என்றே முன்னர் கருதியது.

அதனால் தான், 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்பாட்டுக்கு அமைய, 13வது திருத்தச்சட்டத்தை அரசாங்கத்தின் மூலம் கொண்டு வரச்செய்து மாகாண சபைகளை இந்தியா உருவாக்கியது. ஆனால், நடைமுறையில் இந்தியாவின் இந்த முயற்சி தோல்வியையே சந்தித்துள்ளது. முதலில், விடுதலைப் புலிகள் இதனை ஏற்க மறுத்து, ஆயுதப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

அதையும் மீறி வடகிழக்கு மாகாண சபைக்கு தேர்தலை நடத்தி ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியது இந்தியா. இந்தியப் படைகளின் வெளியேற்றத்துடன் அந்த பொம்மை ஆட்சி முடிந்து போனது. அதன் பின்னர், இதுபற்றி இந்தியா அவ்வளவாக அக்கறைப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர், இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி ஒன்று இந்தியா வலியுறுத்தி வந்தது.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் நிலைப்பாடு, 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான தீர்வையே முன்னிலைப்படுத்துவதாக இருந்தது. ஆனால், அதற்கும் அப்பால் சென்று (13 பிளஸ்) தீர்வு காண்பதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே 2010ம் ஆண்டு இந்தியாவுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார்.

இருந்தாலும், இப்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இல்லை. 13 பிளஸ் என்று கூறியது உண்மையே, ஆனால் அதில், காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லை என்று அரசாங்கத் தரப்பில் முன்னர் வியாக்கியானங்கள் கூறப்பட்டதுண்டு.

இப்போது, நரேந்திர மோடியின் அரசாங்கம், 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டு, அதற்கு அப்பால் சென்று தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.

நரேந்திர மோடி அரசாங்கம், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு அப்பாற் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்துவதற்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாததே, 13 பிளஸ் என்று அரசாங்கம் கொடுத்த விளக்கம் தான் காரணம் என்பதில் சந்தேகமில்லை.

அரசாங்கமும் சரி, சிங்களத் தேசியவாத சக்திகளும் சரி, 13வது திருத்தச்சட்டத்தின் அதிகாரங்களைப் பிடுங்கப் பிடுங்க கூடுதல் அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில், இந்தியாவில் மாநிலங்களுக்குள்ள அதிகாரங்களை விட, இலங்கையில் மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் இருப்பதாக கடந்தவாரம் தெரிவித்திருந்தார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

அதாவது, இந்தியாவில் மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாகவும், ஆனால், மாகாண சபையைக் கலைக்கு அதிகாரம் இலங்கையில் இல்லை என்றும் அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில், கூடுதலான அதிகாரங்கள் இருக்கின்றன. பொலிஸ் அதிகாரங்கள், நிர்வாக அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் கூட அவற்றுக்கு இருக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று தடவைகள் பதவி வகித்தவர். காங்கிரஸ் அரசாங்கம், தமது கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு எத்தனை பாகுபாடுகளை செய்தது என்பதை நரேந்திர மோடி நன்றாகவே அறிவார்.

ஒரு மாநில முதல்வராக இருந்து, மாநில அரசுகளின் மீதான மத்திய அரசின் கெடுபிடி மற்றும் நிர்வாகத் தலையீடு என்பனவற்றை நேரில் பார்த்தவர் அவர். அவரால், 13வது திருத்தச்சட்டம் வழங்கிய காணி, பொலிஸ் அதிகாரங்கள் கூட நடைமுறைப்படுத்தப்படாத- பிரதம செயலாளருக்கே உத்தரவிடும் அதிகாரமில்லாத முதலமைச்சர் ஒருவர், வடக்கில் இருக்கின்ற நிலையை தெளிவாகவே உணர்ந்திருக்க முடியும்.

இந்த விடயம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணத்துக்கு சில நாட்கள் முன்னதாக, ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பொலிஸ் அதிகாரங்களைத் தாம் மாகாணங்களுக்கு வழங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால், தனது சொந்த ஊருக்கே செல்ல முடியாத நிலை தனக்கு ஏற்படும் என்றும், இந்தியாவில், மத்திய அமைச்சர்கள், மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் நியாயப்படுத்தியிருந்தார்.

ஆனால், இந்தக் காரணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கூற முடியாது. ஏனென்றால், நரேந்திர மோடி ஒரு மாநிலத்தில் முதல்வராக இருந்தவர். இப்போது, இந்தியப் பிரதமராகவும் இருப்பவர். ஜனாதிபதி கூறியது உண்மையா என்று அவரை விட வேறெவருக்கும் தெரியமுடியாது.

இந்தநிலையில் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்வது என்பன, இந்தியாவின் அழுத்தங்களுக்குரிய விவகாரமாகவே இருக்கப் போகின்றன.

இந்த அழுத்தம் இனிமேல் அதிகரிக்குமே தவிர, குறையாது. ஏனென்றால், 13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் உத்தியை இந்தியா புரிந்து கொண்டிருக்கிறது. 13வது திருத்தச்சட்டத்தையே இல்லாமல் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் செய்யும் சூழ்ச்சிகளையும் இந்தியா அறிந்து கொண்டிருக்கிறது.

இப்படியான நிலையில், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த இந்தியாவினது நிலைப்பாடு இறுக்கமானதாகவே இருக்கும். ஏனென்றால், அதில் இந்தியாவினது பொறுப்பும் கடப்பாடும் அடங்கியிருக்கின்றன.

இலங்கை அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறுகின்ற அதிகாரப் பகிர்வை மறுக்கின்ற சந்தர்ப்பங்கள் அனைத்துமே, அது தனது காலைத் தானே வாரிக் கொள்வதற்கு வழியேற்படுத்துவதாகவே உள்ளன.

-ஹரிகரன் –

TAGS: