பிரபாகரன், வாழ்க்கையில் கண்ணீர்விட்டு அழுதது அந்த ஒரு நாள்தான்! அது திலீபனுக்கான கண்ணீர்!

p154தன் சொந்தத் தம்பி போலவே திலீபனைக் கருதினார் பிரபாகரன். அண்ணனின் போராட்டத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தார் திலீபன்.

“நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிமிகுந்த போராளியான அவன் மரணித்துக் கொண்டிருந்த போது, என் ஆன்மா கலங்கியது. காலத்தால் சாகாத மாபெரும் வரலாற்று நாயகனாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயர்ந்து நிற்கிறான் திலீபன்!“- இந்திய அமைதிப் படை இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து திலீபன் இறந்தபோது, அவர் நினைவாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நெகிழ்ந்து கூறியது இது!

பிரபாகரனுக்கு, திலீபன் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என ஆசை. ஆனால், சூழ்நிலையும் அரசியலும் அப்போது இடம் தரவில்லை. இப்போது அதற்கு காலம் கனிந்திருக்கிறது.

பெங்களூரைச் சேர்ந்த ஆனந்த்மூர்த்தி, அந்த மாவீரனின் வாழ்க்கையை ‘திலீபன்’ என்ற பெயரிலேயே சினிமாவாக்குகிறார். பிரபாகரன், கிட்டு, யோகி… என புலிகளின் முக்கியத் தலைவர்களையும் தளபதிகளையும் அவ்வளவு இயல்பாக வார்த்திருக்கிறார் ஆனந்த்மூர்த்தி.

பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஆஸ்டின் டவுன்தான், என் பூர்வீகம். 80-களில் ஈழப் போராட்டம் தமிழகத்தில் பெரும் நெருப்பாகக் எரிஞ்சபோது, பெங்களூரிலும் அது தமிழர்களின் உணர்வுகளை உசுப்பியது. புலிகள் பெங்களூரிலும் ஒரு அலுவலகம் வெச்சு இயங்கினாங்க. அப்போ அந்த அலுவலகப் பொறுப்பாளரா, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் இருந்தார்.

அப்போ நான் பள்ளிச் சிறுவன். ஈழத்தில் நடக்கும் அவலங்களை வீடியோ போடுவதும், கண்காட்சியில் விளக்குவதும், ஈழத் தமிழர்களுக்காக நிதி திரட்டுவதுமாக மக்கள் செயல்பட்ட காலம் அது. என் சகோதரர் அரசியல் ஆர்வம் உள்ளவர். அவரும் புலிகளுக்கு நிதி திரட்டினார்.

ஒவ்வொரு நாளும் மக்கள் புலிகள் அமைப்பினரைத் தங்கள் வீட்டுக்கு அழைச்சு விருந்து கொடுப்பாங்க. அப்படி எங்கள் வீட்டுக்கும் அவங்க விருந்துக்கு வந்திருக்காங்க. அந்த அனுபவங்களும் உணர்வுகளும்தான் பள்ளிக் காலத்திலேயே எனக்கு ஈழ விடுதலையின் மீது அக்கறையை, ஆர்வத்தை உருவாக்கின.

1987-ம் ஆண்டு உண்ணாவிரதத்தில் திலீபன் இறந்த செய்தி வந்தபோது, ஈழ உணர்வு அனலாகத் தகித்தது. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டங்களை நடத்தினப்போ, நானும் அதில் தீவிரமா ஈடுபட்டேன்.

இன்னொரு பக்கம், சினிமா இயக்குநர் ஆவதுதான் என் கனவு. அதுவும் என் முதல் படம் திலீபனின் வாழ்க்கை வரலாறா இருக்கணும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். என் இயக்குநர் கனவை நனவாக்க சென்னை வந்தேன். ‘மெட்ராஸ் டாக்கீஸ்’க்கு டிசைன் வேலைகளைச் செய்துகொடுத்த நிறுவனத்தில் டிசைனராக வேலை பார்த்தேன்.

பின்னர், இயக்குநர் கதிர், அமீரிடம் உதவி இயக்குநராக இருந்தேன். மிக முக்கியமாக இயக்குநர் பாலாவிடம் ‘பரதேசி’ படத்தில் வேலை பார்த்தேன். ‘இனி ‘திலீபன்’ சினிமாவை எடுக்கலாம்’னு எனக்குள் நம்பிக்கை வந்த பிறகு, அதற்கான முயற்சியில் இறங்கினேன்.

படத்தின் திரைக்கதையில் இடம்பெறும் சின்னச் சின்ன வசனம், செட் பிராப்பர்ட்டிக்காகக்கூட அடிக்கடி ஈழத்துக்குப் போக வேண்டியிருந்தது. திலீபன் வாழ்ந்த வீடு. அவரோடு பழகிய போராளிகள், உறவினர்கள், அவர் எழுதிய, பேசிய விஷயங்கள்னு ஏகப்பட்ட புதிய விஷயங்களைச் சேகரித்து திரைக்கதை எழுதினேன். சினிமாவுக்காக எந்தச் சமரசமும் இல்லாமல் திலீபனின் வாழ்க்கை அச்சுஅசலா எடுத்துட்டு இருக்கேன்!

படத்தில் திலீபனாக நந்தா, பிரபாகரனாக ஸ்ரீதர், மில்லர் ஆக பரத், கிட்டுவாக வினோத் சாகர், மாத்தையாவாக முனுசாமி எனப் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கு வேல்ராஜ், இசைக்கு ஜி.வி.பிரகாஷ், தேசிய விருது பெற்ற கிஷோரின் எடிட்டிங் என மிரட்டுகிறது படத்தின் தொழில்நுட்பக் குழு.

இந்திய இராணுவம், புலிகளுக்கு இந்தியாவில் இராணுவப் பயிற்சி கொடுத்தபோது, அதில் பயிற்சி பெற்றவர் திலீபன். அவருக்கும் கிட்டுவுக்கும் மிகவும் அடர்த்தியான நட்பு உண்டு. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள கிட்டு, திலீபனை ஏராளமான புகைப்படங்கள் எடுத்துள்ளார். அவர்களுக்கு இடையிலான நட்பின் ஆழம் இயல்பாகவே படத்தில் பதிவாகி இருக்கு!

பிரபாகரனுக்கும் திலீபனுக்கும் இடையிலான பிணைப்பு எப்படிப்பட்டது?

தன் சொந்தத் தம்பி போலவே திலீபனைக் கருதினார் பிரபாகரன். அண்ணனின் போராட்டத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தார் திலீபன்.

இந்திய அமைதிப் படைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் முடிவை திலீபன் தயக்கத்தோடு பிரபாகரனிடம் சொன்னபோது, ‘நான் ஆயுதப் போராட்டத்துக்குதான் உங்களை எல்லாம் உருவாக்கியிருக்கிறேனே தவிர, உண்ணாவிரதம் இருக்க அல்ல’ என மறுத்திருக்கிறார் பிரபாகரன்.

இதை விட்டால் நமது கொள்கைகளின் தீவிரத்தை நிரூபிக்க வேறு வழி இல்லை. ஈழ மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பதையும், எங்கள் மண்ணில் இன்னொரு இராணுவம் நிலைகொள்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதையும் அழுத்தமாகச் சொல்லவேண்டிய தருணம் இது. அதை இந்தியாவின் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால், உண்ணாவிரதம்தான் ஒரே வழி’ என வலியுறுத்தி, பிரபாகரனிடம் ஒப்புதல் பெற்றார் திலீபன்.

ஆனாலும், கடைசி நிமிஷத்துலகூட திலீபன் மனசை மாத்திரலாம்னு நம்பினார் பிரபாகரன். உண்ணாவிரதத்துக்கு முந்தைய இரவு திலீபனை விருந்துக்குக் கூப்பிட்டார் பிரபாகரன். அவரோடு சாப்பிட்டுக்கிட்டே, உண்ணாவிரத முடிவைக் கைவிடச் சொல்லிப் பேசிப் பார்த்தார். திலீபன் எதுக்கும் மசியலை.

விருந்து முடிந்து கிளம்பும்போது திலீபன் பிரபாகரனிடம் இப்படிச் சொன்னாராம்… ‘அண்ணா… நான் சும்மா வேடிக்கைக்காகவோ, கவனஈர்ப்புக்காகவோ உண்ணாவிரதம் இருக்கப்போவது இல்லை. உங்களோடு பேசிய பிறகு தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கலாம் என முடிவு எடுத்திருக்கிறேன்!’ – இப்படி தன் முடிவை இன்னும் கடுமையாக்கி உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தார் திலீபன். எட்டாவது நாளே நினைவு தப்பிருச்சு.

புலிகள் தலைவர் பிரபாகரன், இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். ‘நீங்கள் நேரடியாக உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து திலீபனிடம் மக்கள் முன்னிலையில் உங்கள் வாக்குறுதிகளைக் கொடுங்கள். நாங்கள் உண்ணாவிரதத்தை விலக்கிக்கொள்கிறோம்’ என்று.

ஆனால், கடைசி வரை இந்திய அதிகாரிகள் வாக்குறுதி எதையும் அளிக்காமல், ஈழத்து காந்தியை சாகவிட்டனர். அன்னைக்கு முழுக்க உணவு அருந்தாமல் இருந்த பிரபாகரன், வாழ்க்கையில் கண்ணீர்விட்டு அழுதது அந்த ஒரு நாள்தான். அந்தக் கண்ணீர்… திலீபனுக்காக!

– டி.அருள் எழிலன்

TAGS: