தமிழீழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவதற்கு தயார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமின்றி, தானும் இந்த நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவது தொடர்பில் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரையும் தொடர்ந்து சிங்களவர்களையும் ஏமாற்றும் ஜனாதிபதி மஹிந்தவின் கூற்று அர்த்தமற்றது. அவர் மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடுவதற்கு முனைகின்றார்.
நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனநாயகத்துக்கு மிகவும் அச்சுறுத்தல் மிக்க அதிகாரமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையானது தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் பிரச்சினையான ஒன்றாகும்.
அவ்வாறிருக்கையில் தற்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் மத்தியிலும் மேலெழுந்திருக்கின்றன.
குறிப்பாக இடதுசாரி அமைப்புக்கள், எதிர்க்கட்சிகள், பௌத்த மதத் தலைவர்கள் பலர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நெருக்கடி மிக்க சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ஈழக் கோரிக்கையை முன்வைத்து நிறைவேற்று அதிகாரம் தொடர்பான நெருக்கடியைக் குறைப்பதற்குக் கருதுகின்றார்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிடுவதானது வேடிக்கையாக இருக்கின்றது. உண்மையிலேயே ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது.
இது வெறுமனே சிங்கள மக்களை திசை திருப்புவதற்காக ஜனாதிபதியின் முயற்சியாகும். ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் அர்த்தமற்றவையே. இக்கருத்துக்கள் தொடர்பில் சிங்கள மக்களே தெளிவு பெறவேண்டியவர்களாக உள்ளனர் என்றார்.