வடமாகாண முதலமைச்சரவை உடன்மாற்றவும்! கட்சிக்குள் வலுக்கின்றது முரண்பாடு!!

vikneswaran111வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வனிற்கு எதிரான உள்கட்சி முரண்பாடுகள் அதிகரித்த வருகின்ற நிலையில் செயற்திறனற்ற முதலமைச்சரான அவரை இவ்வருட இறுதியினுள் அப்பதவியிலிருந்து மாற்றி பொருத்தமானவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கோரிக்கைகள் வலுத்தும் வருகின்றது.

அவ்வகையில் பேரவையின் பிரதி அவை தலைவரும் முல்லைதீவினை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு சார்பு உறுப்பினருமான அன்ரனி ஜெகநாதன் கட்சி தலைமையிடம் இக்கோரிக்கையினை வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் அவர் கட்சித் தலைமைக்கு அவசர கடிதமொன்றை கையளித்துள்ளதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா மற்றும் ஏ.சுமந்திரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் செயற்திறனற்ற முதலமைச்சரான அவரை இவ்வருட இறுதியினுள் அப்பதவியிலிருந்து மாற்றி பொருத்தமானவரை அப்பதவிக்கு நியமிக்குமாறும் அவ்வாறு செய்ய கட்சி தலைமை தவறுமிடத்து தான் தற்போது வகித்துவரும் பிரதி அவை தலைவர் பதவி மற்றும் உறுப்பினர் பதவிகளை இவ்வருட இறுதியில் ராஜினாமா செய்துவிடடு வீடுபோகப்போவதாகவும் தெரிவித்துள்ளாதாகவும் கூறப்படுகின்றது.

செயற்திறனற்ற முதலமைச்சரது நடவடிக்கைகளினால் மாகாணசபை முற்றாக சோர்வுற்றுள்ளது. உறுப்பினர்களாகிய நாம் மக்களை எதிர்கொள்ள திராணியற்றிருக்கின்றோம். எம்மீது முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களிற்கு பதிலளிக்க முடியாதுள்ளோம்.

எனது மாவட்டமான முல்லைதீவு தொடர்பில் நடைமுறையில் சாத்தியமான சில வேலைதிட்டங்களை முன்னெடுக்க இதுவரை 50 இற்கும் மேற்பட்ட வேளை தொலைபேசி அழைப்புக்களினை முதலமைச்சரிற்கு எடுத்திருந்தேன். இன்று வரை அவற்றிற்கு அவர் பதிலளிக்கவோ உரையாடவோ முன்வரவில்லை. நேரில் சந்திக்கவும் முடியவில்லை. இவை தொடர்பில் எழுதப்பட்ட கடிதங்களிற்கு என்ன நடந்தது என்பதும் தெரியவில்லை.

இத்தகைய ஒருவர் இக்கதிரையில் நீடிக்க வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ள அவர் வெறுமனே எதையும் செய்யாது கதிரைகளில் ஒட்டிக்கொண்டிருப்பதை விட ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனிடையே முதலமைச்சர் தொடர்பில் அதிருப்தியுற்றுள்ள 18 வரையிலான கூட்டமைப்பு சார்பு உறுப்பினர்கள் வரை தன்னுடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகின்றது.

அன்ரனி ஜெகநாதன் கடிதம் தொடர்பில் தமிழரசுக்கட்சியிடையெ பெரும்பரபரப்பினை கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியிருக்கின்றது.

TAGS: