சர்வதேச கடற்றொழில் சட்டத்தை இந்திய மீனவர்கள் மீது பிரயோகிக்குக-அரச ஆதரவு மீனவ சங்கங்கள்!!

sri-lanka-india-mapஇலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்காக, கடற்தொழில் சட்டவிதிகளின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று அரச ஆதரவு மன்னார் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழில் சங்கத் தலைவர்கள் சட்டமா அதிபருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கோரியுள்ளனர்.

மன்னார் மாவட்ட கடற்றொழில் சங்க சமாசங்களின் தலைவர் என்.எம்.எம்.ஆலம், யாழ் மாவட்ட கடற்தொழில் சங்க சமாசங்களின் தலைவர் அன்ரனி எமிலியான்பிள்ளை ஆகிய இருவருமே வடபகுதி கடற்றொழிலாளர்களின் சார்பில் இந்தக் கடிதத்தை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

தற்போது குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழேயே இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசிக்கின்றார்கள் என்ற குற்றத்துக்காகக் கைதுசெய்யப்படுகின்றார்கள். ஆனால் சர்வதேச கடல் எல்லையைக் கடந்து வந்து மீன்பிடிக்கின்ற வெளிநாட்டவர்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கடற்றொழில் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாங்கள் கோருகிறோம்” என மீனவ அமைப்பினர் தரப்பில் கூறப்படுகின்றது.

கடற்றொழில் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுகின்ற மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றபோதிலும், அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளின் உரிமையாளர் இருந்தால், அவரை அல்லது அந்த படகுக்குப் பொறுப்பாக வருகின்ற ஒருவரைக் கைதுசெய்து தடுத்துவைத்து அவருக்குத் தண்டனை வழங்க முடியும். இதன் ஊடாக இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று மீனவ அமைப்புக்கள் கூறுகின்றன.

இதற்கிடையில், இந்த வருடத்தில் யாழ்.மாவட்ட கடற்பரப்பில் மாத்திரம் பல்வேறு சந்தர்ப்பங்களில் 420 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மேலிடத்து உத்தரவுக்கமைய 400 பேர் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் எனவும் இன்னும் 20 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என யாழ் மாவட்ட நீரியல் கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ் மாவட்ட கடற்தொழில் சங்க சமாசங்களின் தலைவர் அன்ரனி எமிலியான்பிள்ளை கடந்த தேர்தல்களில் ஈபிடிபியுடன் இணைந்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்திருந்தவராவார். இந்நிலையில் அரச தூண்டுதலிலேயே அவர்கள் இக்கடிதத்தை எழுதியிருக்கலாமென நம்பப்படுகின்றது.

TAGS: