ஈழப் போராட்டத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் மாணவர்களை ஒடுக்க காவல்துறை குறிவைத்துள்ளது!

maanavarkalஎஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில்,

’’அண்மையில், இலங்கை இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்‌சேவின் தொடர்புடைய லைக்கா நிறுவனம் கத்தி திரைப்படத்தை தயாரித்து வெளியிடயிருந்த நிலையில், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் கூட்டமைப்புகள் இணைந்த தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, கத்தி பட தயாரிப்பிலிருந்து லைக்கா நிறுவனம் தனது பெயரை நீக்கியது.

இந்நிலையில் கடந்த தீபாவளியன்று சென்னையில் சத்யம், உட்லண்ட்ஸ் ஆகிய திரையரங்குகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. கத்தி திரைப்படம் விவகாரம் தொடர்பாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி 5 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த தாக்குதல் தொடர்பாக, மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையினை காவல்துறை மேற்க்கொண்டுள்ளது. மேலும் அவர்களின் வீடுகள் மற்றும் விடுதிகளுக்கு சென்று மிரட்டி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையினையும் மேற்க்கொண்டு வருகிறது.

திரையரங்குகள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது, அதனை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. இருப்பினும் முறையான விசாரணை மேற்க்கொண்டு உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அப்பாவிகளை குறிப்பாக ஈழப் போராட்டத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் மாணவர்களை ஒடுக்கும் முகமாக அவர்களை காவல்துறை குறிவைத்துள்ளது.

சமீபகாலமாக மாணவர்களிடம் எழுந்துள்ள ஆரோக்கியமான போராட்ட அரசியலை சீர்குலைக்கவும், கைது நடவடிக்கை மூலமாக அவர்களை ஒடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. காவல்துறையின் கண்மூடித்தனமான இந்த நடவடிக்கைகளை எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஆகவே திரையரங்குகள் தாக்குதல் தொடர்பில் உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பாவி இளைஞர்கள், மாணவர்கள் மீது தொடரப்படும் பொய் வழக்குகளைத் திரும்பப்பெற்று, உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

TAGS: