ஜனநாயகப் போராட்டத்தில் முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும்: மாவை எம்.பி

mavai_aswar_001ஜனநாயக ரீதியான போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனதிராஜா தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வலிபர் முன்னணிகளின் 44ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஹெக்டர் கொப்பேக்கடுவ கமநல ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் 80 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனநாயக ரீதியான ஆட்சியொன்று இருக்கின்றது. ஆனால் அதனைத் தாண்டி இரணுவ ஆட்சி, ஆளுநர் ஆட்சி என்பன தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

வடக்கிலும் கிழக்கிலும் இன்று இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசியலும் அரசியல் மயப்படுத்தப்பட்ட இராணுவமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எமது இன, மத, சமூக அடையாங்களை நிலைநிறுத்தி எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நாம் போராடாது இருக்கவும் முடியாது.

1949ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் முதலாவது மாநாட்டில் தந்தை செல்வா முஸ்லிம்களுடைய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தினார். ஒன்றுபட்டுச் செயற்பட வலியுறுத்தினார். இன்று நாம் எமது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அறவழிப் போராட்டத்தை அறிவித்திருக்கின்றோம்.

வன்முறை வேண்டாம். அதனால் நீங்களும் நாங்களும் நிறையவே அனுபவித்து விட்டோம். 1962ஆம் ஆண்டு தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரக பேராட்டம் நடத்தப்பட்ட போது ஆயிரமாயிரம் முஸ்லிம் பெண்கள் கூட அதில் பங்கேற்றனர். அதை நான் என் கண்ணால் பார்த்திருக்கின்றேன்.

மீண்டும் அந்தக் காலம் வருகின்றது. எமது இலக்கை அடைவாற்காக ஜனநாக ரீதியில் நாம் முன்னெடுக்கும் போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் பங்கேற்க வேண்டும் என்றார்.

மேலும், வடக்கு மாகாண சபைக்கு அரசு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களையும் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த மாவை எம்.பி: அஸ்வர் கூச்சல்

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக அஸ்வர் எம்.பி. கூச்சலிட்டு எதிர்ப்பைக்காட்டியுள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன கூட்டத்தில் இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதில் பிரதம அதிதியாக பிரதமர் டீ.எம். ஜயரத்ன கலந்துகொண்டிருந்தார். சிறப்பு அதிதியாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டிருந்தார்.

மாவை சேனாதிராஜா அவர்கள் அங்கு உரையாற்றிய போது , அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் சிறுபான்மை இன மக்கள் மீதான பாரபட்சம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்,தமிழ்- முஸ்லிம்களின் ஒற்றுமையான அரசியல் செயல்பாடுகள் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் டீ.எம்.ஜயரத்ன அவற்றை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தார்,எனினும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அஸ்வர் எம்.பி. உடனடியாக எழுந்து நின்று கூச்சல் போட்டார்.

இதனையடுத்து மாவை சேனாதிராஜாவும் சூடாக பதிலடி கொடுத்தார்.

இருவரும் கடுமையாக வாக்குவாதப்பட்டனர்,அஸ்வர் எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒருசிலர் அவருக்குக் கேட்கும் வண்ணமாகவே புத்தளம் பூருவா (புத்தளத்துக் கழுதை) சத்தம் போடவேண்டாம் என்று கத்தியுள்ளனர்.

இதனையடுத்து சங்கடத்தில் நெளிந்தவாறு அஸ்வர் எம்.பி. எதிர்ப்பைக் கைவிட்டு அமர்ந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் அஸ்வர் எம்.பி.யின் செயற்பாடுகள் காரணமாகவே அரசியல் வட்டாரத்தில் அவருக்கு புத்தளத்துக்கழுதை என்ற பட்டப் பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGS: