வல்வெட்டித்துறை நெற்கொழுப்புப் பகுதியிலுள்ள தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு சொந்தமான காணியை சுவீகரிக்க சதி முயற்சிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேயிடத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இக்காணிக்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் அதற்கு வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் அனந்தராஜ் ஒத்துழைப்பு வழங்கி துரோகமிழைத்துள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவருடன் நகரசபையின் பிரதி தவிசாளர் சதீசும் பிரசன்னமாகியிருந்தார். வல்வெட்டித்துறை நகரசபைக்கு பொது விளையாட்டு மைதானம் தேவையென்ற நோக்குடன் 2000ஆம் ஆண்டு திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 238 பரப்பளவு காணி மைதானத்திற்கு தேவையென்ற ரீதியில் திட்டம் வகுக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கு சில பொதுமக்கள் தங்கள் காணிகளை நன்கொடையாக வழங்கினார்கள். அத்துடன், அதனை அண்டியிருந்த காணிகளும் இணைக்கப்பட்டன. அதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நன்கொடை காணிகளில் தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் காணியும் உள்ளடங்குகின்றது. அவர்கள் தமது பரபரம்பரை கோவிலான சிவன் கோவிலின் கீழ் அக்காணியை மைதானத்திற்கு வழங்கியிருந்தனர்.
தற்போது, 238 பரப்பளவு காணியில் ஒரு பகுதி விளையாட்டு மைதானமாக இருக்கின்றது. மிகுதி அப்பகுதி மக்களால் விவசாயம் செய்யப்படுகின்றது. இந்நிலையில், பிரபாகரனுடைய தந்தையின் காணியின் ஒரு பகுதி தன்னுடையது எனக்கூறி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் 2000ஆம் ஆண்டு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வருகையில், வல்வெட்டித்துறை நகர சபையின் தற்போதய தவிசாளர் எஸ்.அனந்தராஜ் வேலுப்பிள்ளையின் காணிகள் நகரசபைக்கு தேவையில்லையென நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால், விளையாட்டு மைதான காணியானது உரிமை கோரும் நபரிற்கு செல்லவுள்ளது. இந்த வழக்கிற்கான தீர்ப்பு 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வழங்கப்படவுள்ளது.
விளையாட்டு மைதான திட்டத்திலுள்ள ஒரு காணி இவ்வாறு மீண்டும் உரிமையாளர்களிடம் சென்றால் மற்றய காணிகளையும் மக்கள் தங்களுக்கு திரும்ப தரும்படி கூறுவார்கள். இதனால், வல்வெட்டித்துறை நகர சபைக்கு மைதானம் இல்லாமல் போகக்கூடிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
கூட்டமைப்பு சார்பு வல்வெட்டித்துறை நகரசபை தலைவரது தனிப்பட்ட கோபதாபங்களால் பொதுவிளையாட்டரங்கை இழக்கவேண்டிய நிலைதோன்றியுள்ளது.