மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் போராளியான, கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரான நகுலேஸ்வரன் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நாட்டில் இன்று நீதி தோற்றுப் போய்விட்டது. நீதிக்குப் புறம்பான செயல்கள் தான் தற்போதைய ஆட்சியில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஆயுததாரிகளும் தமது அராஜகங்களை சுதந்திரமாக அரங்கேற்றி வருகின்றனர்.
எனவே, சர்வதேச சமூகம்தான் இந்த அராஜகங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
தமிழருக்கு நீதியை, விடுதலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையும், தமிழீழக் காவல்துறையில் பணியாற்றி, இலங்கைப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டவருமான நகுலேஸ்வரன் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தனது வீட்டில் கல் அரிந்து கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் போராளி சுட்டுக் கொலை! இராணுவமே பொறுப்பு என்கிறது கூட்டமைப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் த.தே.கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளருமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னாரில் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டமையை கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில்,
மன்னார் – வெள்ளாங்குளம் இராணுவத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பிரதேசத்தில் எமது கட்சியின் தீவிர ஆதரவாளரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் இனந்தெரியாத நபர்கள் என்று கூறப்படுவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
எனவே, இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். குற்றவாளிகளை அரசு உடன் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தவேண்டும். ஆனால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே.
இந்தக் கொடூர சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நகுலேஸ்வரனின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நகுலேஸ்வரனின் படுகொலையால் முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணை இடம்பெற்று வருகின்ற நிலையில், வடக்கில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
எனவே, இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பின் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற வீடமைப்பு, பொறியியல் – நிர்மாணத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியுள்ளார்.
அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர் எனவும், நேற்றுமுன்தினம் மன்னாரில் ஒரு முன்னாள் போராளி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்றும் சபையில் ஆளுந்தரப்பினரைப் பார்த்து செல்வம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்புடைய செய்தி- காதைத் துளைத்த துப்பாக்கி ரவைகள்: ஸ்தலத்தில் குடும்பஸ்தர் பலி!