தமிழகத்தில்தான் பாதுகாப்பு! இலங்கை செல்லமாட்டோம்: விக்கியின் அழைப்பை ஏற்க மறுக்கும் இலங்கைத்தமிழர்கள்!

tamil rafugees‘தமிழகத்தில் நிம்மதியாக, பாதுகாப்பாக உள்ளோம்; இலங்கை சென்றால், எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது; அங்கு செல்ல விரும்பவும் இல்லை; இந்திய குடி உரிமை கிடைத்தால் போதும்’ என, தமிழகத்தில், அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்; இலங்கை வடக்கு மாகாண முதல்வர், விக்னேஸ்வரனின் அழைப்பை, அவர்கள் நிராகரித்து விட்டனர்.

இலங்கையில், தமிழர் வசிக்கும் பகுதிகளை தனி நாடாக அங்கீகரிக்கக் கோரி, கடந்த, 1983ல், விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே மோதல் மூண்டது. இலங்கைத் தமிழர்கள், பாதுகாப்பு கோரி, தமிழகம் வரத் தொடங்கினர்.கடந்த, 1983 முதல், 2010 வரை, நான்கு கட்டங்களாக, இலங்கையில் இருந்து, 3.04 லட்சம் தமிழர் கள், தமிழகம் வந்தனர்.இவர்கள், அகதிகள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் போர் முடிந்து, இதமான சூழல் ஏற்பட்ட நிலையில், பல்வேறு கட்டங்களாக, 2.04 லட்சம் பேர், இலங்கை திரும்பிச் சென்று விட்டனர்; மீதமுள்ளோர், இலங்கை செல்லாமல், தமிழகத்

திலேயே தங்கி விட்டனர்.

ஒரு லட்சம் பேர்:

தற்போது, தமிழகத்தில், 99,543 இலங்கைத் தமிழர் கள் வசித்து வருகின்றனர். இவர்களில், 65,272 பேர், இரண்டு சிறப்பு முகாம்கள் உட்பட, 112 முகாம்களிலும், முகாமிற்கு வெளியே, சொந்த விருப்பத்தின் பேரில், 34,271 பேரும் உள்ளனர்.இவர்களுக்கு, இந்திய குடி உரிமை மட்டுமே தரவில்லை. மறு வாழ்வுக்கான பல்வேறு உதவிகளையும், அரசு செய்து வருகிறது.பொதுவாக, எல்லாருக் கும் கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 25, 30 ஆண்டுகளாக, தமிழகம்தான் தங்களின் நிரந்த நாடு என்பது போல், இங்கேயே தங்கி விட்டனர்.இந்நிலையில், தமிழகம் வந்த, இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், ‘அகதிகளாக புலம்பெயர்ந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள், தாயகம் திரும்ப வேண்டும்; அவர்களின் மறுவாழ்வுக்கான வசதிகளை இந்திய அரசு செய்து தர வேண்டும்’ என, அழைப்பு விடுத்தார்.இந்த அழைப்பை, அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் நிராகரித்துள்ளனர். ‘தமிழகத்தில், இந்திய குடியுரிமை தவிர, எல்லா சலுகைகளும் கிடைக்கின்றன. எங்கள் குழந்தைகள், இங்கேயே திருமணம் முடித்துள்ளனர். குழந்தைகள், பேரக்குழந்தைகள் என, நிம்மதியாக, மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக வாழ்கிறோம்; இலங்கை திரும்பும் எண்ணம் இல்லை’ என்று, அவர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு இல்லை:

‘அரசு வேலை தராவிட்டாலும், வெளி நிறுவனங்களில் வேலை செய்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையில், இன்ன மும் பாதுகாப்பான சூழல் இல்லை. அங்கு சென்றால், பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எங்களுக்கு அழைப்பு விடுத்த, முதல்வர் விக்னேஸ்வரனுக்கே அங்கு பாதுகாப்பு இல்லை’ என, வெளிப்படையாக பேசுகின்றனர். ‘அதற்காக, நாங்கள் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகளாக இருக்கவும் விரும்பவில்லை. பர்மா தமிழர்களுக்கு தந்தது போல், எங்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றுத்தர, தமிழக அரசு உதவ வேண்டும்’ என, இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘அசையா சொத்துகள் ஏதும் வாங்கக் கூடாது என்பதுதான், அவர்களுக்கு நிபந்தனை; மற்ற எந்த நெருக்கடியும் இல்லை. எல்லா சலுகைகளும் கிடைத்து, பாதுகாப்பாக இருப்பதால், தமிழகம் பிடித்துப்போய், குடியுரிமை கோருகின்றனர். இதுகுறித்து, மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.உயிருக்கு பயந்து இந்தியா வந்தோம்; பஞ்சத்திற்காக வரவில்லை:இலங்கை தமிழர்கள் பேட்டி

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் முகாம் தலைவர் தங்கையா, 60:

எங்களுக்கு வாழ்வு கொடுத்தது இந்தியா; வாழ்ந்தாலும், செத்தாலும் இங்கே தான். இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறுவது, முற்றிலும் பொய். இந்தியர்களுக்கே, அங்கு பாதுகாப்பில்லை. எங்களால் எப்படி வாழ முடியும்.

சென்னை புழல் அருகே, காவாங்கரை முகாமில் வசிக்கும், திரிகோணமலை, நகுலேஸ்வரன், 20:

இந்தியாவில், எங்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு கூட, இலங்கையில் கிடைப்பதில்லை. அங்கு விலைவாசியும் அதிகம். இந்தியா தலையிட்டு பிரச்னை தீர்ந்து, தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலை உருவானால், சந்தோஷம் தான். ஆனால், அதற்கான உத்தரவாதத்தை அளிக்க, யார் முன் வருவார்கள்?இங்கு இருப்பதையே பாதுகாப்பாக கருதுகிறோம். எங்களுக்கு இங்கு குடியுரிமை கொடுத்தால், உதவியாக இருக்கும். இலங்கை பிரச்னைக்கு, முழு தீர்வு ஏற்பட்ட பின், அங்கு செல்வது பற்றி சிந்திக்கலாம்.

 

கோவை, பேரூர் அருகில் உள்ள பூலுவபட்டி முகாமில் வசிக்கும் சிவதர்சினி: 

இன்னும், அங்கு நிலைமை சீராகவில்லை. அங்கு எங்கள் உறவினர்கள் பலர் உள்ளனர். அவர்கள், இன்னும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். எங்கள் உயிருக்கு அங்கு உத்திரவாதம் இல்லை. அதனால், இந்திய அரசு எங்களை திருப்பி அனுப்பக் கூடாது. போக எங்களுக்கும் விருப்பம் இல்லை.

விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு முகாமில் வசிக்கும் ராஜரத்தினம், 40:

இலங்கை, மன்னார் மாவட்டத்தில் இருந்து, 1990ல் தமிழகம் வந்தோம். அது நாள் முதல் இங்கு வசித்து வருகிறோம். எனக்கு, நான்கு குழந்தைகள் உள்ளனர். அனைவருமே இந்த முகாமில் பிறந்தவர்கள். விக்னேஸ்வரன் அழைப்பை வரவேற்கிறோம்.ஆனால், அங்கு அடிப்படை வசதி கிடையாது. தமிழகத்தில், நாங்கள் தினமும் கூலி வேலைக்குச் சென்று தான் பிழைக்கிறோம். ஆனால், நிம்மதியாக இருக்கிறோம்.

மதுரை மாவட்டம், திருவாதவூர் முகாமில் வசிக்கும் ஒய்யம்மாள்: 

நாங்கள் இங்கு, 25 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். இங்கு பலருக்கு குழந்தைகள் பிறந்து, இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர். இனி இலங்கை சென்றால், குடியுரிமை பிரச்னை ஏற்படும். மேலும், அங்கு வருமானத்திற்கு வழியிருக்கிறதா என, சந்தேகம் உள்ளது. தொழில் தேட வேண்டும். அங்கு பாதுகாப்பு இருக்காது. இங்கு இருப்பதையே விரும்புகிறோம்.

மானாமதுரை மூங்கில் ஊரணி முகாம் தலைவர் நடராஜ்: 

தமிழகத்தில், 115 அகதிகள் முகாம்கள் உள்ளன. தமிழகம் வந்த வடக்கு மாகாண முதல்வர், ஒரு முகாமிற்கு கூட செல்லவில்லை. அகதிகள் எப்படி இருக்கின்றனர் என்று கூட பார்க்கவில்லை.இவர் அழைப்பை ஏற்று, இலங்கைக்கு எந்த அடிப்படையில் செல்வது. பெரும்பாலான அகதிகளுக்கு, திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் அனைவரும் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். கல்வியை பாதியில் விட்டு விட்டு, எப்படி இலங்கை செல்வது.இலங்கையில் அவருக்கே பாதுகாப்பு இல்லை. இதில் எங்களை அழைப்பது வேடிக்கை.

 

கோவை, பேரூர் அருகில் உள்ள பூலுவபட்டி இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும்தியாகராஜன்: 

நான் அங்கு இருந்த போது, 14 முறை, என்னை ராணுவத்தினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று துன்புறுத்தினர். நாங்கள் அங்கு சென்றால் இதே நிலை தொடரும். அங்கு அமைதி திரும்பி விட்டது என்பது எல்லாம், பொய்யான தகவல்.

தேவகோட்டை முகாம் தலைவர் ஆர்.குமார்:

தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு செல்ல எங்களுக்கு விருப்பமில்லை. இங்கு இந்திய குடியுரிமை கிடைக்காவிட்டாலும், அரசு எங்களை நல்ல முறையில் கவனித்து கொள்கிறது.தமிழர்கள் அண்ணன், தம்பிகளாக பழகுகின்றனர். இலங்கையில் ராணுவத்தினர் எங்களை கொன்றாலும் கேள்வி இல்லை. அங்கு போதிய மக்கள் இல்லை என்றால், விக்னேஸ்வரன் முதல்வராக ஆகியிருக்க முடியாது.

மதுரை மாவட்டம், கூடல் நகர் முகாமில் வசிக்கும் ஜெயந்தி:

இலங்கையில் உள்ள உறவினர்கள், முகாம்களில் உள்ள மக்களிடம் தொடர்பு கொள்ளும் போது, ‘தயவு செய்து வந்துவிடாதீர்கள்’ என்கின்றனர். நிலங்களையும் கையகப்படுத்தி விட்டார்கள். அதை எல்லாம், அவர்களிடமிருந்து திருப்பி வாங்குவது என்பது, சாத்தியமே இல்லை. இந்த முகாமில், 24 ஆண்டுகளாக அமைதியான முறையில் வாழ்க்கையை நடத்துகிறோம். இங்கு எங்களுக்கு குடியுரிமை அளித்தால் போதும்.

திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுாத்து அகதிகள் முகாமில் வசிக்கும், எஸ்.மஞ்சுளாதேவி, 45:

இலங்கை வவுனியாவில் இருந்து, 1990ல் இங்கு வந்தோம். திருமணம், முகாமில் தான் நடந்தது. மகன், மகள் உள்ளனர். இங்கு அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளது.இலங்கை செல்ல விருப்பம் இல்லை. இந்திய அரசு, எங்களுக்கு குடியுரிமை தர வேண்டும். இலங்கை சென்றால், பிள்ளைகளின் படிப்பு கேள்விக்குறியாகி விடும்.

 

விருதுநகர் மாவட்டம், குல்லூர் சந்தை முகாமில் வசிக்கும் கமால் மேரி: 

இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், குடும்பத்துடன், 1990ல் இம்முகாமிற்கு வந்தோம். தற்போது, ஜவுளி வியாபாரம் செய்கிறேன். இந்திய குடியுரிமை வேண்டி வலியுறுத்தினோம். கிடைக்கும் என, நம்பினோம்; ஆனால் கிடைக்கவில்லை.எங்கள் பிள்ளைகள் மேல்படிப்பு படித்தாலும், அரசு வேலைக்கு செல்ல முடியாது. இங்கு குடியுரிமை வேண்டும் அல்லது இலங்கைக்கு அனுப்பி வைக்க , அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் தங்கி உள்ள சித்திக், 40: 

இலங்கை தலை மன்னாரில் இருந்து, நான் குடும்பத்தோடு, தமிழகத்திற்கு வந்து, 23 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் சொத்துகளை எல்லாம் இழந்தாகி விட்டது.அங்கு செல்வதைப் பற்றி யோசித்துப் பார்க்க கூட முடியாது. கொத்தனார் வேலை செய்து, மூன்று பெண்களில் ஒருவருக்கு, தற்போது தான் திருமணம் செய்து வைத்தேன். ஒரு பெண் கல்லூரியில் படிக்கிறார். மற்றொரு பையனும், பொண்ணும் இங்கு தான் படித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த, வேடர் காலனி முகாமில் வசிக்கும் கமலம்:

எங்களை இலங்கைக்கு அழைக்கும் அரசியல் தலைவர், முதலில், எங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். வீடுகள் கட்டி கொடுத்து, அதில் சுதந்திரமாக குடியமர்த்த வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன், அங்கு பிரச்னை ஏற்பட்ட போது, நாங்கள் இலங்கையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அப்படியே விட்டு விட்டு, உயிருக்கு பயந்து இந்தியா வந்தோம். யாரும் பஞ்சத்திற்காக வரவில்லை. இவ்வளவு காலம் நல்லபடியாக, பாதுகாப்பாக வாழ்ந்த பின், மீண்டும் நாங்கள் இலங்கைக்கு செல்ல மாட்டோம்.

இலங்கையில் இருந்து வந்து, 25 ஆண்டுகள் கடந்து விட்டது. தற்போது, இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையே, கேள்விக்குறியாக உள்ளது. அங்கு சென்றாலும், நாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இல்லை. இந்நிலையில், நாங்கள் அங்கு போய் என்ன செய்ய முடியும். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அதிகாரமற்ற முதல்வர். தற்போது, ஐ.நா., சபையில் மனித உரிமை மீறல் குறித்த புகார் விசாரணை, நிறைவு பெற்று தீர்ப்பு வரும் நிலை உள்ளது. இந்நிலையில், தமிழர்களுக்காக நாங்கள் அதை செய்தோம், இதை செய்தோம் என, விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, இது போன்று செய்து வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள், மீண்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை, என்பது தான் உண்மை.

ஆனந்தராஜ்,தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி முகாம் 
தமிழக அரசு தரும் சலுகை என்ன?

குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய்; உறுப்பினர்களுக்கு, தலா, 750 ரூபாய்; 12 வயதுக்கு குறைவானோரில் ஒருவருக்கு, 400 ரூபாய் மாதாந்திர உதவி தரப்படுகிறது.*ரேஷன் கார்டு வழங்கி, 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் மற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன.*12ம் வகுப்பு வரை இலவச கல்வி. உயர் கல்விக்கு, படிப்பின் தன்மைக்கேற்ப, 850 ரூபாய் முதல், 4,700 ரூபாய் வரை உதவி. இதுதவிர, அரசு விடுதிகளில் தங்கிப் படிக்க வசதி.*தையல் பயிற்சி, இலவச தையல் இயந்திரம், மகளிர் சுய தொழில் வழங்க கடன் உதவி.

*அரசின் எல்லா விதமான மாதாந்திர உதவித்தொகைகள்.

*குழந்தை பிறப்புக்கு, 12 ஆயிரம் ரூபாய் உதவி; இறந்தோர் ஈமக்கிரிகைக்கு 5,000 ரூபாய் உதவி; விபத்தில் இறந்தால், 25 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி.

*குடியுரிமை தவிர, தமிழக மக்களுக்கு கிடைக்கும், அரசின் எல்லா சலுகைகளும், இவர்களுக்கும் கிடைக்கின்றன.
முகாம்களுக்கு வெளியே?*தமிழகத்தில், இரண்டு சிறப்பு முகாம்கள் உட்பட, 112 அகதிகள் முகாம்கள் உள்ளன.

*1983 முதல், நான்கு கட்டங்களாக, தமிழகத்திற்கு, 3.04 லட்சம் பேர் வந்துள்ளனர்.

*பல்வேறு நிலைகளில், 2.04 லட்சம் பேர் இலங்கை திரும்பி விட்டனர். 99,543 பேர் தமிழகத்தில் உள்ளனர்.

*19,728 குடும்பங்களைச் சேர்ந்த, 65,272 பேர் முகாம்களிலும், அரசின் அனுமதியோடு, 13,271 குடும்பங்களைச் சேர்ந்த, 34,271 பேர், முகாம்களை விட்டு வெளியிலும் வசித்து வருகின்றனர்.

*மார்ச் 2012க்கு பின், இலங்கையில் இருந்து யார் வந்தாலும், வெளிநாட்டினர் என்றே கருதப்படுகின்றனர். பாஸ்போர்ட், விசாவுடன் வந்தால் மட்டுமே அனுமதி. தேவைக்கேற்ப விவசாவை நீட்டித்துக் கொள்ளலாம்.

ஒன்றிணைந்த பர்மா அகதிகள்: 

பர்மாவில், 1960ல், ராணுவ ஆட்சி வந்தது. அங்கு, பல்வேறு நிலைகளில் வாழ்ந்த, ஏராளமான தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். உடைமைகளை எடுத்துவர அனுமதியில்லை.வேறு வழியின்றி, 1963ல், வெறுங்கையோடு அகதிகளாக, தமிழகம் வந்தனர்.சென்னையின், பல்வேறு பகுதிகளிலும் குடியேறினர். சில ஆண்டுகளில், இந்திய குடியுரிமை கிடைத்தது. பல்வேறு இடங்களில், பர்மா நகர் என்ற பெயர் இருந்தாலும், தமிழக மக்களோடு ஒன்றாகி விட்டனர்.ஆனால், இலங்கை தமிழர்கள், 25 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில், குடியுரிமை இன்றி அகதிகளாகவே உள்ளதால், அவர்கள் பர்மா அகதிகள் போல், முற்றிலும் மக்களோடு ஒன்றிணைய முடியாத நிலை உள்ளது.

நன்றி,

தினமலர் -நிருபர் குழு –

TAGS: