இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு பொய்யன் – எரிக் சொல்ஹெய்ம்

Erik Solheimஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு அப்பட்டமான பொய்யன் என்றும், தேர்தலுக்காகப் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார் என்றும் இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.

இறுதி யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர், இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியில் நோர்வேயில் விசேட சமாதானத் தூதுவராக விளங்கிய எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு இரகசியமாக நிதி வழங்கியிருப்பதாக நேற்றையதினம் சனிக்கிழமை குருநாகலில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதற்குத் தனது டுவீட்டரில் குறிப்பு வெளியிட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம்: “தேர்தலொன்று அண்மித்துவரும் காலபகுதியில் இலங்கை ஜனாதிபதி அப்படமாகப் பொய் கூறுகிறார். இதற்கான தக்க பதிலை நான் நாளை வெளியிடுவேன்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு இந்த நிதியினை வழங்கியதாகக் கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி, விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பலமானவர்கள் என்றும் அவர்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்று அவர் தன்னிடம் பலமுறை கூறியிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக மேலோங்கியிருந்த 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையில் சமாதான அனுசரணை முயற்சிகளில் நோர்வே நேரடியாக ஈடுபடத் தொடங்கியது. அந்த முயற்சியின் பலனாக 2002 ஆம் ஆண்டு மோதலில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கயொன்று எட்டப்பட்டுச் சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முடிவில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக முழுமையாகத் தோற்கடிக்கப்பட இது வழிசெய்தது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் முயற்சியினைத் தொடர்ந்து ஏப்பிறல் 2006 ஆம் ஆண்டு இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் சர்வதேச நாடுகள் பலவற்றின் அனுசரணையுடன் 2009 மே மாத நடுப்பகுதிவரை இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் போது சுமர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திட்டமிட்டமுறையில் அரச படைகளினால் கொன்றழிக்கப்பட்டனர்.

இது குறித்த போர்க் குற்ற விசாரணைகளில் ஐ.நா தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்த விசாராணைகளை இலங்கை அரசு முற்றாக நிராகரித்திருப்பதுடன், விசாரணையாளர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கும் அனுமதி மறுத்திருக்கிறது. -http://www.pathivu.com

TAGS: