எமது காணி எமக்கு வேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்து மடிவோம்!

எமது காணி எமக்கு வேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்து மடிவோம் என மாதகல் காணி உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாதகல் துறைமுக பகுதியில் உள்ள 4 பரப்பு காணியினை கடற்படை முகாம் அமைக்கும் நோக்குடன் சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் மோற்கொள்ளப்பட இருந்தன.

அதற்கு காணி உரிமையாளரும் மக்கள் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நில அளவை திணைக்கள அதிகாரிகள் காணி உரிமையாளரிடம் “எனது காணியை அளக்க நான் சம்மதிக்க வில்லை ” என கடிதம் எழுதி வாங்கிவிட்டு அளவீட்டு பணியை கைவிட்டு திரும்பி சென்றனர்.

அது தொடர்பில் காணி உரிமையாளர்களில் ஒருவரான செல்லத்துரை நவரட்ணம் என்பவரே மேற்கண்டவாறு தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

´கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ள 4 பரப்பு காணிக்குள் எனது ஒன்றரை பரப்பு காணி உள்ளது. இந்த காணியில் தான் எனது 8 படகுகளையும் கரையேற்றுவேன். தற்போது கடற்படை முகாம் அமைத்துள்ளதால் எனது படகுகளை கரையேற்றுவதற்கு இடமில்லாமல் உள்ளது.

 

எனது 8 படகுகளில் ஒரு படகு கரையேற்றுவதற்கு இடமில்லாமல் கடலிலையே கட்டி வைக்கப்பட்டுள்ளது. மூன்று படகுகள் கடல் கரையையோட்டியே கரை ஏற்றியுள்ளேன்.

காற்று பலமாக அடித்தாலோ கடல் நீர் உள்வந்தாலோ கரையில் நிற்கும் படகுகள் கடலில் அடிபட்டு போய்விடும். அதனால் பல லட்சம் ரூபா நஷ்டம் ஏற்படும்.

எனவே நான் எனது தொழிலை செய்வதற்கு எதுவாக எனது நிலம் எனக்கு வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் எனது குடுபத்துடன் உண்ணாவிரதம் இருந்து மடிவதை தவிர வேறு வழியில்லை´ என தெரிவித்தார்.

இன்றைய தினம் மேற்கொள்ளபப்ட இருந்த காணி அளவீட்டுக்கு வட மாகாண சபை உறுப்பினர்களான சு.சுகிர்தன், அனந்தி சசிதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான ச.சஜீவன், ச.சதீஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். -http://www.pathivu.com
தொடர்புடைய செய்தி :

கடற்படையின் தேவைக்காக மாதகலில் காணி சுவீகரிப்பு நில அளவையை எதிர்த்து மக்கள் போராட்டம்!

TAGS: