போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து ஒரு தீபம்கூட ஏற்றமுடியாத நிலையில் தமிழினம்: அரியம் எம்.பி

ariyammp-09போரில் உயிரிழந்த 145,000  தமிழ் மக்களையும் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி உயிரிழந்த 40000 ற்கும் மேற்பட்ட விடுதலை போராளிகளையும் நினைவுகூர்ந்து ஒரு தீபம்கூட ஏற்றமுடியாத நிலையில் இலங்கையில் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று 11 அமைச்சுக்களுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர்  இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர்,

இந்த நாட்டின் ஜனாதிபதியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வடகிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களூடாக ஆலயங்களில் பூசை செய்யுமாறு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டு, அவரது பிறந்தநாளான இன்று ஆலயங்களில் விசேட பூசையும் இடம்பெற்றுள்ளது.

இவரது பிறந்தநாளன்று கட்டாயமாக ஆலயங்களில் விளக்கேற்றுமாறு கட்டளையிடும் அரசாங்கம் இந்த நாட்டிலே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீபச்சுடரினைக்கூட ஏற்ற முடியாத நிலையில்தான் எம்மினம் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

இன்று இங்கு நடைபெற்ற குழு நிலை விவாதத்தின் போது இரண்டு அமைச்சுக்களின் விபரம் அடங்கிய ஒளிநாடா இறுவெட்டு வெளியிடப்பட்டிருந்தது.

அந்த இறுவெட்டு உறையில் விசேட கருத்திட்ட அமைச்சு, தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு என்பதற்கு பதிலாக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி முற்றுமுழுதாக தமிழை கொலை செய்திருக்கின்றார்கள்.

தமிழனை கொலை செய்த இந்த அரசாங்கம் இன்று தமிழையே கொலை செய்கின்றார்கள் இப்படித்தான் இவர்களது செயற்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகின்றது.

இங்குள்ள அமைச்சுக்களில் முக்கியமான அமைச்சாக மீள்குடியேற்ற அமைச்சு ஒன்று உள்ளது.

இந்த மீள்குடியேற்ற அமைச்சில் பிரதி அமைச்சராக மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவர் இருக்கின்றார். அவர் அங்குள்ள மக்களுக்காக ஒரு வீடுகூட கட்டிக் கொடுக்கவில்லை. மாறாக மலசல கூடந்தான் கட்டிக்கொடுத்திருக்கின்றார்.

இந்திய அரசாங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப்படும் 50ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் கூட முழுமை பெறாத வீட்டுத்திட்டங்களாகவே அமைந்திருக்கின்றன.

அதாவது அவர்களால் அனுப்பப்பட்ட சுற்று நிரூபத்தில் ஒரு அறைக்கு மாத்திரந்தான் உள் சுவர் பூசப்பட்டு அதற்கு மாத்திரம் கதவு போடுவதென்றே அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதனால் அந்த வீட்டுத்திட்டமும் முழுமை பெறாத வீட்டுத்திட்டமாகவே இருக்கின்றது. இதுபோன்றுதான் வடகிழக்கில் உள்ள 95 வீதமான வீட்டுத்திட்டங்கள் முழுமை பெறாத வீட்டுத்திட்டங்களாகவே இருந்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் யானைகளின் தாக்கம் இருக்கவில்லை. மாறாக கடந்த மூன்று வருடங்களிலே அதிகளவான காட்டு யானைகளின் தாக்கம் கூடுதலாக காணப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 6 பிரதேச பிரிவுகளாக உள்ள வெல்லாவெளி, வாகரை, கிரான், செங்கலடி, பட்டிப்பளை, வவுணதீவு ஆகிய இடங்கள் யானைத் தாக்கத்திற்கு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களாகும்.

இங்கு 21 பேர் மரணித்திருக்கின்றார்கள். 9 பேர் காயங்களுக்குள்ளாகி இருக்கின்றார்கள். 400 வீடுகள் முழுமையாக சேதமாக்கப்பட்டிருக்கின்றது.

ஏறக்குறைய 350 விவசாயிகளின் உள்ளீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றது. இறந்தவர்களில் 19 பேருக்கு மாத்திரம்தான் 1இலட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் முற்றாக அழிக்கப்பட்ட 400 வீடுகளுக்கும் எந்தவிதமான நட்டஈடும் வழங்கப்படவில்லை.

யானைகளின் வரவினை கட்டுப்படுத்த மின்சார வேலிகள் அமைக்கப்படுவதாக கூறினாலும், அது இதுவரைக்கும் சாத்தியப்படாத விடயமாகவே இருந்து வருகின்றது.

யானைகள் வாழும் இடங்களில் பெரும்பான்மை இனத்தவர் பயிர்ச்செய்கைக்கு நிலங்களை பயன்படுத்துவதனால் அங்குள்ள யானைகள் மக்கள் வாழும் இடங்களுக்குள் ஊடுருவுகின்றது.

இதனை தடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் யானைகளில் இருந்து தங்களை பாதுகாக்க மாற்று வழிகளை மக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என்றார். -http://www.tamilwin.com

TAGS: