20 இலங்கைத் தமிழ் அகதிகள் திருச்சியில் தற்கொலை முயற்சி!

trichy-mukam-01திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கைத் தமிழர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில், பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏராளமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும், தங்களை வேறு முகாமிற்கு மாற்றக் கோரி , கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து 20 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதனையடுத்து இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாமில் 3வது நாளாக 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்புமுகாமில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 25 பேர் மலேசியநாட்டவர் ஒருவரும் எதுவித நிபந்தனையும் இன்றி தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 15ம் திகதி முதல் உண்ணா விரதப் போராட்டதினை ஆரம்பித்து மூன்றாவது நாளாக தொடர்கின்றனர்.

அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு விடுதலை செய்வதில் சட்டச்சிக்கல்கள் இருப்பதாக கருதினால் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப் பிரதிநிதிகள் தங்களை நேரில் சந்தித்து விசாரணை செய்து தனிமனித உரிமையை மதித்து விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்ககோரி உண்ணாவிரதப்போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

உண்ணாவிரதத்தின் இரண்டாவது நாளான நேற்று, R.D.O கணேசசேகரம், அகதிகளுக்குகான தனித்துணை ஆட்சியர் நடராஜன் (திருச்சி), கியூபிரிவு DSP பால்வண்ணன் ஆகியோர் உண்ணாவிரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களது கோரிக்கையினை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக மட்டும் கூறிச்சென்றனர்.

இலங்கையில் யுத்தம் நடக்கும் போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பியதான குற்றச்சாட்டில் கைதானவர்கள், அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முயன்றதான குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்ற பிணையில் வெளியே வந்தவர்கள் ஆகியோர் நீதிமன்ற மற்றும் சிறை வளாகத்தில் வைத்து மீண்டும் கைது செய்து, நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காமல் சிறப்பு முகாமில் அடைகின்றனர்.

அயல்நாட்டவர் சட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு அடைக்கப்படுவதாக காவல்துறையால் காரணம் கூறப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு அடைக்கப்படுபவர்கள் அனைவரும் அகதிகளாக தமிழகம் வந்து அகதி முகாம்களில் முறைப்படி பதிவு செய்து வாழ்ந்து வருபவர்கள் ஆவர். அத்துடன் முறைப்படி வீசா அனுமதி பெற்று இந்தியா வரும் ஈழத்தமிழர்கள் வீசா அனுமதி காலம் முடிவதற்கு முன்னரே சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னர் சிறப்பு முகாமில்அடைக்கப்படுகிறார்கள்.

இவை அனைத்தும் சட்டத்துக்கு புறம்பாக செய்யப்படும் செயல்களாகவே கருதப்படுகிறது.

சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள், அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்படுகின்ற தண்டனை காலத்திற்கு அதிகமாக (பலமாதங்கள், பல வருடங்கள்) இங்கு அடைத்து வைக்கப்பட்ட பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

பின்னர் அவ்வழக்கினை அவர்கள் நடத்தி முடிப்பதற்கு பல வருடங்கள் ஆகும் என்ற பயத்தினால் செய்யாத குற்றத்தினை ஏற்றுக்கொள்கின்ற சூழ்நிலைகளும் ஏற்படுகின்றது. தற்போது இங்குள்ளவர்கள் ஒரு வருடம் தொடக்கம் எட்டு வருடங்கள் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அடைக்கப்படுபவர்கள் குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி காலவரையறையற்று அடைக்கப்படுவதால் பொருளாதார ரீதியாக நலிவடைந்து பல குடும்பங்கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றன.

அந்த பாதிப்பினால் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்படுபவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் முழுமையாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று அடையாளபடுத்தபடுபவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுகின்றனர்

ஈழத்தில் போரினால் காயமடைந்து இடுப்புக்கு கீழ் இயங்காதவர், பிறர் உதவி இன்றி செயற்பட முடியாதவர் அனைவரும் ஈவு இரக்கமின்றி இந்த சிறப்பு முகாமில் அடைத்து கொடுமைப் படுத்தப்படுகின்றார்கள்.

மேலும், வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கும், உறவினர்கள் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. இது சர்வதேச மனிதவுரிமை மீறலான விடயமாகும்.

தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் பலரும் இந்த கொடுமையான சிறப்பு முகாமில் இருந்து ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரி பல கட்டப் போராட்டங்களை பல வருடங்களாக நடாத்தியும் அரசு செவி சாய்ப்பதாக இல்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். -http://www.tamilwin.com

TAGS: