இராணுவத்துக்கு காணிகளை விற்க வேண்டாம்! பா.கஜதீபன் வேண்டுகோள்

kajatheepan_speech_003-100x80படையினருக்கான முகாம்களை அமைப்பதற்காக காணிகளை எந்த விதத்திலாவது அரசிடம் விற்க வேண்டாம் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர் முடிவுற்று 05 ஆண்டுகளான பின்பும் எமது மக்கள் அகதிகளாக முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக மக்களின் காணிகள் இராணுவத்தினராலும், அரசாங்கத்தினராலும் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

வலி.வடக்குப் பிரதேசம் முற்று முழுதாக அபகரிக்கப்பட உள்ள சூழ்நிலையில், உள்ளூரில் உள்ள படைமுகாம்கள் அமைந்துள்ள காணிகள் அளக்கப்பட்டு, அபகரிக்கும் முயற்சிகள் பரவலாக இடம்பெற்று வருகின்றன.

ஆனால் தமது பூர்வீக வாழ்விடத்தை வழங்க மறுக்கும் மக்கள் தமது மக்கள் பிரதிநிதிகளின் உதவியுடன் காணி அபகரிப்பை போராட்டங்களில் ஈடுபட்டு தடுத்து வருகின்றனர்.

தமது காணியை அரசாங்கத்துக்கோ, படைகளுக்கோ விற்கத்தயார் இல்லை என எழுத்து மூலம் தெரிவித்து வருவதுடன், சிலர் வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால் ஒருகுடம் பாலில் ஒருதுளி விஷம் கலந்தது போல் ஒரு சிலர் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டோ, படையினரதும், அரச அதிகாரிகளினதும் ஆசைப் பேச்சுக்களுக்கு மயங்கியோ அல்லது பயந்தோ தமது பூர்வீக காணிகளை இராணுவ முகாம்களை அமைக்க விற்க சம்மதம் தெரிவித்து வரும் விரும்பத்தகாத அதிர்ச்சி தரும் சம்பவங்களை அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர்.

அண்மையில் மாதகல் பிரதேசத்தில் இடம்பெற்ற படைமுகாம் அமைப்பிற்கான நில அளவை முயற்சிகளை தடுத்து நிறுத்தும் நோக்குடன் சென்ற போது, அந்த நிலஅளவையாளர், அக்காணிச் சொந்தக்காரரின் சம்மதக் கடித்தை காண்பித்து தமது பணியை மேற்கொண்டுள்ள நிலையில் எம்மால் எதுவும் செய்ய முடியாத அவல நிலையை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

ஆகவே எம் உறவுகளே! படையினருக்கான முகாம்களை அமைப்பதற்காக உங்கள் காணிகளை எந்த விதத்திலாவது அரசிடம் விற்க வேண்டாம்.

எமது இனத்தின் எதிர்கால இருப்பைச் சிதைக்கும் வேலைகளை ஊக்குவிக்க வேண்டாம் எனவும் மிகவும் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கின்றேன் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மேலும் தெரிவித்துள்ளார். -http://www.puthinamnews.com

TAGS: