போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்திய மீனவர்களுடன் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி வியாழனன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டிருக்கின்றது.
யாழ் மாவட்ட மீனவர் அமைப்புக்களின் சமாசம் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்ததாக அதன் தலைவர் எமிலியான்பிள்ளை தெரிவித்தார்.
யாழ் கண்டி வீதியில் அமைந்துள்ள மீனவர் அமைப்புக்களின் சமாசத் தலைமை அலுவலகத்தில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி, யாழ்ப்பாணம் சிறிதர் தியேட்டர் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சென்று ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் கையளிப்புடன் முடிவடைந்தது.
மூன்று மீனவர்களின் குடும்பத்தினர், அவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரை ஈபிடிபி கடசியின் வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவநாதன் பெற்றுக் கொண்டதுடன், மரண தண்டனை பெற்றுள்ள மீனவர்களின் மனைவியருடன் கொழும்பில் உள்ள அமைச்சர் தொலைபேசியில் உரையாடி ஆறுதல் கூறுவதற்கான வசதியையும் ஏற்படுத்தியிருந்தார்.
இந்த மீனவர்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி அவர்கள் நேரடியாக ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டதற்கமையவே இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இதில் இலங்கை மீனவர் விடயத்தில் இருக்கக் கூடிய சட்டப் பிரச்சினைகளை தீர்த்து அவர்களை நிச்சயமாக விடுவித்துத் தர முயற்சிப்பேன் என்று கூறினார்.
-BBC