வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் அல்லல்கள் பல சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களை யாரும் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.உண்மையைச் சொல்வதனால் நான் கூடத் திரும்பிப் பார்ப்பதில்லை.இவ்வாறு மனம் திறந்து கூறினார் வடமாகாணக் கல்வியமைச்சர் த.குருகுலராஜா.
யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு அண்மையில் கல்லூரியின் ஆ.சி.நடராஜா அரங்கில் அதிபர் வி.ரி.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்ற போது முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முக்கியமானதொரு இடத்திலே இந்தக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தப் பாடசாலைக்கு அருகிலுள்ள இடங்களைப் பற்றித் தான் இன்று உலகம் முழுவதும் பேசிக் கொள்கிறார்கள்.கடந்த கால் நூற்றாண்டு காலமாக எமது மக்கள் தமது சொந்த இடத்துக்குப் போக முடியாத இக்கட் டான காலகட்டத்தில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சுமார் 1000 மாணவர்கள் வரை கல்வி கற்ற காங்கேசன் துறை நடேஸ்வராக் கல்லூரியை
இன்று திட்டமிட்ட முறையில் அழித்து விட்டார்கள்.
இன்றைய இளைய தலைமுறையினரில் பலர் தமது சொந்த இடங்கள் எப்படி இருக்குமென்று கூடத் தெரியாத அப்பாவிகளாகவுள்ளனர்.பரம்பரை பரம்பரையாகச் சொந்த நிலத்தின் சுகத்தை அனுபவித்த எமது மக்கள் இன்று அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளதை எண்ணும் போது வேதனையாகவுள்ளது.
அந்த மக்கள் விரைவில் மீளக் குடியேற வேண்டும்.தமது சொந்த நிலத்தின் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என இந் நன்னாளிலே இறையருளை வேண்டுவோம்.
தமிழர்கள் பிரச்சினையை எதிர்கொள்ளும் ஆற்றல் தனித்துவமானது.எங்கள் பரம்பரையினர் மூதாதையர்கள் எதையும் எதிர்கொள்ளும் சக்திமிக்கவர்கள்.
அவர்களின் வழியில் எமக்கெதிராக இழைக்கப்படும் அநீதிகளை வாழ்க்கைப் பாடமாகக் கொண்டு நல்லவர்களாக,வல்லவர்களாக,நாளைய சமூதாயத்தை ஆளப் போகும் மாணவ செல்வங்களாக நீங்கள் மிளிர வேண்டும் என்றார். -http://www.tamilcnnlk.com
செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:-ரவி.