வன்னியில் வேலியே பயிரை மேயும் நிலையில்: அடக்கு முறையால் தவிக்கும் அப்பாவிப் பொதுமக்கள்!

sivamokan-60x60பாரிய யுத்தத்தின் பின் வன்னிப் பிரதேசத்தில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட மக்கள், பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

மாற்றானிடன் கையேந்தாமல் வந்தோரை விருந்தோம்பல் செய்த தமிழினம் வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்த வரலாறு மறக்கப்பட முடியாதது.

இளம் பெண் பிள்ளைகள் கூட நடுநிசியில் பயமின்றி றோட்டில் உலாவிய மண் எமது வன்னி மண்.

இன்று மாற்றான் இனம் பொலீஸ் படை, ராணுவப்படை, கடல்படை, அடையாளமே இல்லாத புலனாய்வுப் படை, அவர்களுடன் இயங்கும் தமிழர் ஒற்றர் படை என அனைத்தையும் இறக்கி வன்னிப் பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டதாக எக்காளம் இடுகிறது சிங்கள பேரினவாத அரசு.

ஆனால் நடப்பதுவோ வேறு! இன்று ஒரு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிலே தொடர்புடைய முன்னாள் போராளியும் அரச உளவாளியரும் அடையாளம் காட்டப்பட்டனர்.

ஆனால் ஏனையவர்கள் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. துப்பாக்கி எங்கிருந்து வந்தது என வெளிப்படுத்தப்படவில்லை.

அதே போல் தம்பி என்றழைக்கப்படும் சந்திரரூபன் ஒட்டுசுட்டான் கருவேலன் கண்டல் பிரதேசத்தில் வாள் வெட்டுக்கு
இலக்காகினார். பணங்கள் கொள்ளை போயின. பலமுள்ள ஒருவர் என்பதால் கொலை செய்ய முடியவில்லை. சம்மந்தப்பட்டவர்களில் ஒருவர் பொலீஸ் அதிகாரி. அது கூட பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டதால் வெளிவந்தது. மற்றவர்கள் யார்? “இவர்கள் தான் புலனாய்வாளர்கள் என்ற பெயரில் இறக்கி விடப்பட்ட அடையாளம் தெரியாத கிறீஸ் மனிதர்கள்.”

வன்னி மாவட்டத்தில், மக்கள் எப்படி பொலீஸை நம்ப முடியும்? வேலியே பயிரை மேய்ந்தால் யார் பொறுப்பெடுப்பது? பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலீசாரே கொலை கொள்ளையில் ஈடுபட்டால் அல்லது உடந்தையாகினால் எமது மக்களை யார் பாதுகாப்பது?

இதற்கு தீர்வாக இராணுவத்தை மக்களற்ற பிரதேசத்தில் முடக்குமா இந்த அரசு? புலனாய்வாரள்கள் என்று இயங்கும் இந்த முகமூடிகளை வன்னிப் பிரதேசத்தை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமா அந்த அரசு. கடமை, நீதி, நேர்மை, கண்ணியத்துடன் செயல்படும் பொலீஸ் படையை நியமிக்குமா இந்த அரசு என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன். -http://www.tamilcnnlk.com

TAGS: