ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஆட்சிக்கு வருவாரானால் அவர் நிச்சயமாக ஒரு சர்வாதிகாரியே. இவ்வாறு தெரிவித்துள்ளார் பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.
பொலன்னறுவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு,
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு அரசாங்கம் நாட்டிற்கு எதையும் செய்யவில்லை. ஆனால் நான் ஆட்சிக்கு வந்தால் நிலைமை மாறும்.
அப்படி ஒரு வாய்ப்பை மக்கள் எனக்குத் தந்தால், விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை முற்று முழுதாக நடைமுறைப்படுத்துவதுடன், அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களுக்கான கடனை ரத்துச் செய்வேன். அரசாங்கத்திலிருந்து நான் விலகியதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார பொறிமுறை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது என்னை அரசாங்கம் புலி என்கிறது. ஆனால் விடுதலைப்புலிகள் என்னை கொலை செய்ய முயன்றனர். எனவே நான் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்ய தயாராகவுள்ளேன். பதவிக்கு வந்தால் எவரையும் பழிவாங்காமல் கௌரவமாக நடத்துவேன் என்றார். -http://www.tamilcnnlk.com