ஜனாதிபதி தேர்தலும் தமிழ் பேசும் மக்களும்

Sri-Lanka-Electionஇலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துக் கொண்டு வருகின்றது. மஹிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கு மைத்திரி என்ற ஒரு பொது வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக்கின்றார்கள். அவர் வேறு யாருமல்ல. சிறிது காலத்திற்கு முன் மஹிந்த அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்தவர் தான்.

இலங்கையின் அரசியல் யாப்புக்கமைய ஒரு பெளத்த சிங்களவரே ஜனாதிபதியாக வர முடியும் என்பதால் இது வெறும் சிங்களவர்களுக்கான தேர்தல் மட்டுமே.

பிரியதர்சன யாப்பா சற்று முன்னதாக “நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறவேண்டிய அவசியமில்லை, அவர்களின் ஆதரவு நமக்கு தேவையுமில்லை” என்று கூறியிருக்கின்றார்.

இதன் அர்த்தம் சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் ஒரு வேண்டாத இனமாகவே இலங்கையில் பார்க்கப்படுகின்றது.

எந்த சிங்களக் கட்சியோ அல்லது சிங்கள வேட்பாளரோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேருகின்றதோ அல்லது குறைந்த பட்சம் ஆதரவைப் பெறுகின்றதோ அவர்/அந்தக் கட்சி தோற்றுப்போகும் வாய்ப்பே அதிகமாக இருக்கின்றது.

மைத்திரி, மஹிந்தரை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறாரே தவிர அவர் சிங்கள பேரினவாதத்தை தாங்கி நிற்கும், சிறுபான்மை இனத்தை அழிக்க நினைக்கும் சிங்கள அரசியல் வாதியாகவே தான் இருக்கின்றார்.

சற்று முன்னதாக அவரது பிரச்சாரத்தில் “மஹிந்தவையோ, அவரது சகோதரர்களையோ அல்லது இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர்களையோ போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைச் சபையினால் கைது செய்யப்பட்டுக் கொண்டு போக ஒருபோதும் விடமாட்டேன் என்று கூறியிருக்கின்றார்.

மறுபுறத்தில் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசா சிங்கள மக்களுக்கு தேர்தல் வாக்குறுதியாக “நாம் ஆட்சிக்கு வந்தால் புலத்திலுள்ள புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதே எமது முதல் வேலை” என்கின்றார்.

சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே குட்டைக்குள் ஊறிய மட்டைகள் தான்.

ஆதலால் சிறுபான்மையின மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஒருபோதும் வெல்லப் போவது இல்லை என்று தெரிந்தாலும் கூட இந்துவோ, கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ யாரோ தமிழ் பேசும் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி அவருக்கே எமது வாக்குகள் அனைத்தையும் வழங்குவதன் மூலம் சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்தும் எமது உறுதியான நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம்.

இந்த தேர்தலில் மைத்திரி வென்று விட்டால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஒரு அரச அரக்கன் அழிக்கப்பட்டு விட்டான், ஆனால் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை இனவழிப்பு நிறுத்தப்படப் போவதில்லை.

எனவே நாம் எமக்கென்று ஒரு தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மைத்திரி ஜனாதிபதியானதும் ஐநாவின் மனித உரிமைச் சபை மகிந்தரையும் சகோதரர்களையும் மற்றும் இராணுவ தளபதிகளையும் மனித உரிமைமீறல் விசாரணைக் குழு விசாரித்து சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனையும் வாங்கிக் கொடுத்து விடும்.

அத்தோடு இலங்கைத் தேசத்தில் தமிழ்பேசும் மக்களுக்கெதிராக இதுவரை காலமும் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளும் இனவழிப்பும் புதைக்கப்பட்டு மறைந்து போகும்.

ஒட்டுமொத்த சிங்கள அரசியல் வாதிகளும் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள். நாம் தமிழ் பேசும் மக்கள் தான் தெளிவாக இல்லை. நாம் ஒட்டு மொத்த சர்வதேசத்திற்கும், எமது வாக்குகள் எல்லாம் ஒரு தமிழருக்கு மட்டுமே என்று காட்டவேண்டும்.

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் மட்டுமே தமிழ் பேசும் எம்மக்களது பிரச்சனைகளுக்கான தீர்வு கிட்டும் என்று உரக்கக் கூறவேண்டும்.

விடுதலைப் புலிகளும் தமிழர் விடுதலைப் போராட்டமும் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட நாளில் இருந்து பெரும்பான்மையினத்தவராலும், சிங்கள பெளத்த இனவாதிகளாலும், சிங்கள அரச பயங்கரவாதத்தாலும் இலங்கையில் சிறுபான்மையினருக்கெதிரான வன்முறைகள் அதிகூடிய வேகத்தில் மிகவும் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே தமிழ்பேசும் மக்களும் மற்றைய சிறுபான்மை மக்களும் சிந்தித்து சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காது, எமது வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஒருபோதும் சிறுபான்மையான எமக்கு எந்த விதத்திலும் ஒரு தீர்வை பெற்றுத் தரப்போவதில்லை என்பதையும், எம் சிறுபான்மை இனத்தவரில் ஒருவரை நாம் தேர்ந்தெடுத்து எமது வாக்குகளை அவரிற்கு வழங்குவதன் மூலம் எம்மினத்தவர் ஒருவர் ஜனாதிபதியானால் தான் எமக்கு உரிமை கிடைக்கும் என்று உலகிற்கு ஒரு செய்தியை நாம் தெளிவாக கூறலாம்.

மலையூர் பண்ணாகத்தான்
[email protected]

http://www.tamilwin.com

TAGS: