இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலுக்கு இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் காரணமாகிவிட்டது என ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சீனா அரசிடமிருந்து இலங்கை பெற்ற அத்தனை திட்டங்களுக்கான கடனை திரும்பி செலுத்த முடியாவிட்டால் அந்த திட்டங்கள் அனைத்தும் சீனாவிற்கு சொந்தமாக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தமையே இந்தியாவின் சந்தேகத்தை அதிகரித்ததற்கான காரணம்.
இலங்கையில் சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் முதலானவற்றின் கடனை செலுத்தாவிட்டால் இவைகள் அனைத்தும் சீனாவிற்கு சொந்தமாக்கப்படும்.
இதனால், இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான அச்சுறுத்தலுக்கு இலங்கை அரசின் செயற்பாடுகள் காரணமாகிவிட்டது.
இதன் காரணமாகவே இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் இப்போதைய விஜயம் மிக முக்கியத்துவம் பெறுகின்றது.
பாதுகாப்பு ஆலோசகர்கள் விஜயம் வழமையானதாக இருப்பது சகஜம். ஆனால் இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமென இந்தியா கருதுவதற்கு இந்த அரசின் செயற்பாடுகள் முக்கிய காரணமாகிவிட்டது.
இப்பொழுது ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் காலகட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்தும் சம்பவமாகவே இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார். -http://www.tamilwin.com