ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உருவாகும் புதிய அரசு, ஜனாதிபதி முறைமையை அகற்றி விட்டு, 18ம் திருத்தத்தை ஒழித்து, 17ம் திருத்தத்தை மீண்டும் அரசியலமைப்பில் சேர்த்த பின், முதல் பிரச்சினையாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு தேட வேண்டும். இதை நான் நேற்று ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கு விளங்கும் விதமான உரக்க சிங்கள மொழியில் இவர்களின் முகங்களை பார்த்தே பகிரங்கமாக சொன்னேன். அதை இங்கே மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
பொது எதிரணி கோட்பாடுகளில், இன்று இனப்பிரச்சினை இல்லை. ஜனாதிபதி முறைமை, 18ம், 17ம் திருத்தங்கள் ஆகியவை பற்றியே பேசப்பட்டுள்ளன.
நாம் இன்று இவற்றுக்கு தடையாக இருக்கவில்லை. ஆகவே இனப்பிரச்சினை தீர்வை ஒரு நிபந்தனையாக நாம் இன்று முன்னிறுத்தவில்லை.
ஆனால், அதற்காக இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். இதற்கான தீர்வு தேடல்தான் தமிழ், முஸ்லிம் மக்களின் முதன்மை தேவை. ஞாபகப்படுத்துகின்றேன் என அவருக்கு நான் தோழமையுடன் கூறுகிறேன்.
குடும்ப ஆட்சி, நண்பர்- உறவினர்களுக்கான பொருளாதார கொள்கை, சட்ட ஆட்சியின் வீழ்ச்சி, ஊழல், வீண் விரயம், ஊடக ஒடுக்குமுறை, குற்றம் செய்யும் சிலருக்கு கிடைக்கும் பாதுகாப்பு ஆகியவை ஒழிக்கப்பட வேண்டுமென நாங்களும் விரும்புகிறோம்.
ஆகவே அதற்கான தேசிய போரட்டத்தில் நாங்களும் இருக்கின்றோம். ஆனால், அதைவிட தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எங்களுக்கு முக்கியம். எங்கள் பட்டியலில் அதற்குதான் முன்னுரிமை தருகிறோம், என்றார். -http://www.pathivu.com