ஜனாதிபதித் தேர்தல் பற்றிய ஆர்வம் தமிழர் தரப்பிடம் கொஞ்சம் கொஞ்சமாக் குறையத் தொடங்கியுள்ளதை அண்மைய நாட்களாக அவதானிக்க முடிகிறது.
பொதுவாகவே, ஜனாதிபதி தேர்தல்களில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை, வாக்களிப்பில் பங்கேற்பதில்லை.
முன்னைய ஜனாதிபதித் தேர்தல்களில் மிகக் குறைந்தளவு வாக்களிப்பே இடம்பெற்றிருப்பதை, கடந்த காலத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
பொதுவாகவே ஜனாதிபதி பதவியானது தமிழர்களுக்கு அந்நியமானதொன்று என்ற கருத்து உள்ளது.
சிங்கள பௌத்தர் அல்லாத ஒருவரால், ஜனாதிபதி பதவியில் அமர முடியாத நிலை தான், தமிழ் மக்களை மட்டுமன்றி, ஏனைய சிறுபான்மையின மக்களையும் அந்நியப்படுத்தி வைத்திருப்பதற்கு முக்கியமான காரணம்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழர் தரப்புகளிடம் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வம் இருந்த போதிலும், பின்னர் அது படிப்படியாகக் குறைந்து விட்டது.
அதற்கு, இந்த தேர்தலும் தமக்கு அந்நியமானதே என்ற கருத்து, மீளவும் வலுப்பெற்றுள்ளது தான் காரணம் என்பதில் சந்தேகமில்லை.
1. தமிழர் தரப்பின் நியாயங்களைக் கேட்டறிந்து கொள்ளத்தக்க வேட்பாளர்கள் எவரும் களத்தில் இறங்காமை,
2. தமிழர் தரப்புக்கு நியாயங்களை வழங்க முன்வராது போனாலும், குறைந்தபட்சம் அவர்களின் நியாயங்களை செவிமடுக்கும் ஆற்றல் பெற்ற ஒருவர் கூட களத்துக்கு வராமை,
3. பிரதான வேட்பாளர்கள் சிங்கள பௌத்த அடிப்படைவாத சக்திகளின் கைக்குள் சிக்கியிருப்பது.
இந்த மூன்று விடயங்களும் தமிழர் தரப்பின் ஆர்வமின்மைக்கு முக்கியமான காரணங்களாகும்.
எதிரணியின் தரப்பில், குறைந்தபட்சம் தமிழர்களின் வாக்குகளை கவரக் கூடிய ஒருவர், களமிறக்கப்பட்டிருந்தால் கூட, அவர்களின் ஆர்வம் சற்று அதிகரித்திருக்கக் கூடும்.
ஆனால், மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில், தமிழர்களுக்காக ஒருபோதும், குரல் கொடுத்தவருமில்லை. தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து நியாயமான கருத்துக்களை முன்வைத்தவருமில்லை.
இப்போதும் கூட அவர், சிங்கள பௌத்த வாக்குகளை மட்டும் தான் குறிவைப்பவராக இருக்கிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இணையாக தானும் போரில் பங்களித்தேன் என்பதை நிரூபிக்கவே அவர் இப்போது முனைகிறார்.
போரின் இறுதி இரண்டு வாரங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் இருக்கவில்லை என்றும், நான்கு முறை தானே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்து போரை வழி நடத்தியதாகவும், மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.
இப்படியாக, பிரதான இரு வேட்பாளர்களும் சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக, தமிழ் மக்களின் வாக்குகளை இழக்கவும் தயாராகவே இருக்கின்றனர்.
தமிழ்மக்களின் கவலைகள், கரிசனைகள் குறித்தெல்லாம் கவலைப்படாத பிரதான வேட்பாளர்கள் விடயத்தில் தமிழ் வாக்காளர்கள் கூடுதல் அக்கறை செலுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
கடந்தகாலம் குறித்து மறந்து விட்டு எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்குக் கூட, தமிழ்மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்சவையும் அவரது அரசாங்கத்தையும் ஆதரித்த சிங்களக் கடும்போக்காளர்கள் இப்போது மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர்.
முதலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறியது.
தாம் சுதந்திரமாகச் செயற்படப் போவதாகவும், அரசாங்கத்தில் இருந்து மட்டுமே விலகியதாகவும், ஆளும் கூட்டணியில் இருந்து விலகவில்லை என்றும் கூறிய ஜாதிக ஹெல உறுமய இப்போது, மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்துள்ளது.
தேசிய சங்க சபா, தேசிய பிக்குகள் முன்னணி போன்ற பௌத்த அமைப்புகளும் மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்தில் நிற்கின்றன.
அதுபோலவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பொதுபல சேனா, ராவண பலய போன்ற கடும் போக்கு பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் ஆதரவளித்துள்ளன.
கடந்த காலங்களில், மஹிந்த ராஜபக்சவை தெளிவாக ஆதரித்து, அவரைப் பலப்படுத்திய சிங்கள அமைப்புகள் இப்போது பிரிந்து நிற்கின்றன.
இரண்டு பக்கங்களிலும் இந்த அமைப்புகள் பிளவுபட்டு நிற்பதால், சிங்கள பௌத்த அடிப்படைவாத வாக்குகள் பிரிந்து போகும் சூழல் ஒன்று இருக்கிறது.
ஆனால் இன்னொரு பக்கத்தில், தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் மத்தியில், எந்தப் பக்க வேட்பாளர் வெற்றி பெற்றாலும் தாம், சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளால் நசுக்கப்படுவோம் என்று கருதும் நிலையை உருவாக்கவும் தவறவில்லை.
இரண்டு பிரதான வேட்பாளர்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தான் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகளின் பிரதான திட்டமாக இருக்கலாம்.
தம்மை மீறிய ஒரு சக்தி ஆட்சிக்கு வருவதை பௌத்த அடிப்படைவாத சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதற்கு, தமது ஆதிக்கம் வலுவிழந்து போகும் என்ற அச்சம் ஒரு காரணம்.
ஆட்சிக்கு வரும் தரப்பு தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகள் விடயத்தில் நெகிழ்ந்து கொடுத்து விடக் கூடாது என்ற தூரநோக்கு மற்றொரு காரணம்.
இதனால் தான், தெளிவான இலக்குடன் இருபக்கத்திலும் பௌத்த அடிப்படைவாத சக்திகள் பிரிந்து நிற்பதாகத் தெரிகிறது.
இத்தகையதொரு சூழலில், தமிழ் மக்கள், எந்த நம்பிக்கையுடனும் இந்த தேர்தலை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல், போரை வழி நடத்தியது தாமே என்று மார்தட்டிக் கொண்ட இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கிடையான போட்டியாக அமைந்திருந்தது.
அதில், இரு வேட்பாளர்களுமே போரை நடத்தியவர்களாகவும், அதில் இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்களாகவும் இருந்தனர்.
அதனால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றிருந்தும், சரத் பொன்சேகாவினால் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற முடியவில்லை.
தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்காக பெருமெடுப்பில் வாக்களிக்க வெளியே வர எத்தனிக்கவில்லை.
காரணம், அவர் போரில் ஆற்றிய பங்கை, தமிழ் மக்களால் மறக்க முடியவில்லை.
அத்துடன், அந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை தரும் என்றும் அவர்கள் நம்பவில்லை.
2010 ஜனாதிபதி தேர்தலில் கடந்த காலம் குறித்து அதிகம் சிந்தித்த தமிழ் வாக்காளர்கள், இந்தத் தேர்தலில் எதிர்காலம் குறித்து அதிகம் சிந்திக்கத் தலைப்படுகின்றனர்.
அதாவது, எந்த வேட்பாளரை ஆதரித்தால், தமிழ் மக்களின் குறைந்த பட்ச பிரச்சினைகளாவது தீர்க்கப்படும் என்று தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருமே தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்குவேன் என்று கூறப் போவதும் இல்லை, அவர் ஜனாதிபதியானதும், தமிழர்களின் உரிமைகளை அள்ளி வழங்கி விடப் போவதுமில்லை.
ஆனால், தமிழர்களின் பிரச்சினைகளை கொஞ்சமேனும் நியாயபூர்வமாக கையாளும், அணுக முற்படும் ஒருவரையே ஆதரிக்க முடியும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை.
அவ்வாறு பார்த்தால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவோ, மைத்திரிபால சிறிசேனவோ, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏமாற்றம் அளிக்கின்ற வேட்பாளர்களாகவே தெரிகின்றனர்.
இவர்கள் சுயமாக தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க விரும்பினாலும் கூட, இவர்களின் பின்புலமாக இருக்கும் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள் அதற்கு இடம்கொடுக்கப் போவதில்லை.
போர்க்குற்றங்கள், தமிழர்களுக்கான உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில், இறுக்கமான கடிவாளத்தைப் போட்டுத் தான் இந்த அமைப்புகள், தமது ஆதரவைப் பிரதான வேட்பாளர்களுக்கு அளிக்க முன் வந்துள்ளன.
இத்தகைய நிலையில், இந்தக் கட்டுக்காவலை உடைத்துக் கொண்டு அவர்கள் வெளியே வரப் போவதுமில்லை,
அவ்வாறு நம்பிக்கை வைக்கும் அளவுக்கு தமிழ் வாக்காளர்கள் முட்டாள்களுமில்லை.
இத்தகைய பின்புலத்தில் தான் தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் இருந்து அந்நியமாகி வருகின்றனர்.
இது இயல்பாக நிகழ்கிறது என்பது போலத் தெரிந்தாலும், திட்டமிட்டே விலக தமிழர்கள் தூர விலக்கி வைக்கப்படுகின்றனர் என்பதே உண்மை.
– சத்ரியன்
-http://www.tamilwin.com
அழகாக சொன்னார் – சத்ரியன்…..
ரொம்ப ரொம்ப கழிசடையா இருக்கு சத்திரியன் சரக்கு.