பொது வேட்பாளரைக் களமிறக்குவதில் பின்புலத்தில் மறைமுகமாக நின்று உதவிகள் பல வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அந்தப் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்து வரும் அறிக்கைகளால் அதிர்ச்சியடைந்துள்ளது.
தான் பேரினவாதியாம், சமஷ்டி என்ற பேச்சிற்கே இடமில்லையாம், ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு காணப்படுமாம். தமிழ்க் கூட்டமைப்பு எதிர்பார்ப்பது போன்று மாகாண அதிகாரங்களை ஒருபோதும் வழங்க முடியாதாம், இது பெளத்தர்களுக்குச் சொந்தமான நாடாம் என மைத்திரி அடுக்கிவரும் அறிக்கைகளால் தமிழ்க் கூட்டமைப்பு செய்வதறியாத நிலையில் உள்ளது.
இதன் காரணமாக அக்கட்சிக்குள் மைத்திரியை மறைமுகமாகக் கூட ஆதரிக்க வேண்டாம் எனும் கருத்து வலுப்பெற்று வருகிறது. மைத்திரிபாலவின் அறிக்கைகளை வாசித்த தமிழ் மக்களும் அவருக்கு தமிழ்க் கூட்டமைப்பு மட்டுமல்ல எந்தவொரு தமிழ்க் கட்சியும் ஆதரவு வழங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழ்க் கூட்டமைப்பிற்குள் இப்போது பாரிய நெருக்கடியும், இழுபறிநிலையும் காணப்படுவதாக அக்கட்சி உள்ளக வட்டாரங்களிலிருந்து நம்பகரமாகத் தெரியவந்துள்ளது.
இதேபோன்று பொது வேட்பாளர் தெரிவில் முன்னின்று பாடுபட்ட மற்றுமொரு தமிழ்க் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் மைத்திரிபாலவின் எதேச்சையானதும், தமிழ் மக்களை வெறுப்பேற்றும் அறிக்கைகளாலும் மனமுடைந்து விரக்தி நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மைத்திரிபால தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை எவ்விதமான கருத்துக்களையும் முன்வைக்காததுடன் இனப்பிரச்சினை தொடர்பாக மனோ கணேசனினால் சிங்கள மொழியில் முன்வைக்கப்படும் கருத்துக்களையும் காதில் வாங்கிக் கொள்ளாது அலட்சியமாக இருந்து வருவதாகவும் மனோ கணேசன் தனது முக நூலில் பிடிகொடாது மறைமுகமாக கவலை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை காலமும் தமிழ்க் கூட்டமைப்பினாலும், மனோ கணேசனினாலும் இனவாதக் கட்சி என கூறப்பட்ட ஜாதிக ஹெல உருமய கட்சி தமிழ் மக்களுக்குத் தீவு கிடைப்பதை நேரடியாகவே பல தடவைகள் எதிர்த்து வந்தது. இப்போது அக்கட்சி பொது எதிரணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளமையையும் தமிழ்க் கூட்டமைப்பினாலும், மனோ கணேசனினாலும் ஜீரணிக்க முடியாதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மறுக்கிறார் மனோ கணேசன்: தான் மைத்திரியின் வெற்றிக்காகவே பணியாற்றுவதாக அறிவிப்பு
மைத்திரிபாலவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பு! மனோவும் பின்வாங்கும் நிலையில்…” என்ற தலைப்பில், தமிழ்வின் இணையத்தில் வந்துள்ள ஒரு ஆய்வு செய்தி கட்டுரையையிட்டு நான் கவலையடைந்துள்ளேன். பெயர் குறிப்பிடப்படாத இக்கட்டுரையாளர் தெரிவித்துள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை.
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல் நான் ஒருபோதும், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாகவும், பொது எதிரணி தொடர்பாகவும் எந்தவித அதிருப்தியோ, மனமுடைந்து விரக்தியோ அடையவில்லை என ஜனாநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்வின் இணையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை திகதியிடப்பட்டு வெளியாகியுள்ள ஆய்வு கட்டுரை தொடர்பாக மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாகவும், பொது எதிரணி தொடர்பாகவும், நான் ஒருபோதும் அதிருப்தியோ, மனமுடைந்து விரக்தியோ அடையவில்லை. உண்மையில் முன்னைவிட அதி தீவிரமாக நானும், எங்கள் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியும், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காகவும், மகிந்த ராஜபக்சவின் தோல்விக்காகவும் கடுமையாக உழைத்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி முறையமையை அகற்றும் மக்கள் ஆணையை பெற்று ஒரு இடைக்கால ஜனாதிபதியாக மாத்திரமே செயல்படுவார். இந்த இடைக்கால ஆட்சியை அடுத்து பொது தேர்தலின் பின்னர் உருவாகும் புதிய பாராளுமன்ற அரசாங்கமே தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்காக செயற்படும் கடப்பாட்டை கொண்டிருக்கும். எனவே இடைக்கால ஜனாதிபதி இனப்பிரச்சினை தொடர்பாக செயற்படும் தேவை இங்கே எழவில்லை.
மேலும் மைத்திரி பாலா சிறிசேனவை மட்டும் நம்பி, பொது எதிரணி மற்றும் ஜனாதிபதி தேர்தல் கோதாவில் நாம் இறங்கவில்லை. இங்கே ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க போன்ற சிரேஷ்ட அரசியல்வாதிகளும் உள்ளார்கள். இவர்களுடன் இணைந்துதான் மைத்திரிபால செயற்படுகிறார். எனக்கும், அவருக்கும் இடையில் நல்ல செயற்பாட்டு உறவு இருக்கிறது. இந்த அணியில் இருக்கின்ற இன்னொரு கட்சிதான், ஜாதிக ஹெல உறுமயவாகும். அவர்களது கொள்கையில், அவர்கள் நிற்பது போல், எமது கொள்கையில் நாம் நிற்கின்றோம். இடைக்கால ஆட்சியை அடுத்து அவர்களுடன் எமக்கு எந்தவித கூட்டு செயற்பாடும் இருக்க போவதில்லை.
-http://www.tamilwin.com
தமிழ்க் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சரியாகத்தான் பேசுறரா?