மீண்டும் சூடுபிடிக்கும் போர்க்குற்ற விவகாரம்!

war-100x801சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைகளில் போர்க்குற்றங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கத் தொடங்கியுள்ளன.

முன்னர் போர்க்குற்றங்கள் என்ற சொல்லையே, ஒரு தீண்டத்தகாத சொல் போலக் கருதிய சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இப்போது அதுபற்றி அதிகம் செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளன.

அரசியல் மேடைகளுக்கு அப்பாலும் போர்க்குற்றங்கள் என்ற விவகாரம் இப்போது முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்யும் ஐ.நா. குழு மிகவும் அமைதியாக எந்தத் தகவல்களும் வெளியே கசிந்து விடாத வகையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

அந்த விசாரணைக் குழுவுக்கு சன்ட்ரா பெய்டாஸ் என்ற மனித உரிமை நிபுணர் தலைமை தாங்குகிறார். மார்ட்டி அதிசாரி, அஸ்மா ஜகாக்கீர், டேம் சில்வியா கார்ட்ரைட் ஆகியோரை அடங்கிய நிபுணர் குழு அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

இவை தவிர விசாரணைக் குழுவின் விபரங்களோ அந்த விசாரணை மேற்கொள்ளப்படும் முறை குறித்த தகவல்களோ வெளியே விடப்படவில்லை.

ஒருபக்கத்தில் இது இலங்கை அரசாங்கத்தினால் கேள்விக்குட்படுத்தப்பட்டாலும் கூட ஐ.நா. தனது இரகசியம் பேணும் நடவடிக்கையில் உறுதியாக இருக்கிறது.

தகவல்கள் பகிரங்கமாவது இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரையில் சாட்சிகளுக்கும் விசாரணையாளர்களுக்கும் ஆபத்தானது என்பதால் தான் இத்தகைய உயர் இரகசியம் பேணப்படுகிறது.

விசாரணை பற்றிய இரகசியங்களைப் பேணுவது தமது பொறுப்பு என்று ஐ.நா. ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த விசாரணை அறிக்கை இன்னும் மூன்று மாதங்களுக்குள் தயாராக வேண்டும் என்பதால் விசாரணை அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

அதேவேளை, இந்த விசாரணை அறிக்கை இலங்கைக்கு சாதகமாக அமையாது என்ற கருத்து பரவலாகவே காணப்படுகிறது.

இலங்கை அரசாங்க மட்டத்தில் கூட இந்த அறிக்கை பற்றிய ஒரு அச்சம் பரவியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

இந்த அடிப்படையிலும் இதனை வைத்து அரசியல் ஆதாயத்தை தேடிக் கொள்ளும் நோக்கிலும் தான், தற்போதைய அரசியல் மேடைகளில் போர்க்குற்றங்கள் என்ற சொல் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் போர்க்குற்றங்கள் குறித்து பேசுகிறார்.

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் அதுபற்றி பேசுகிறார். சஜித் பிரேமதாஸவும் பேசுகிறார். ஜாதிக ஹெல உறுமயவும் பேசுகிறது.

மொத்தத்தில் முன்னர் ஒரு காலத்தில் இவர்கள் எல்லோராலும் வெறுக்கப்பட்ட போர்க்குற்றங்கள் என்ற சொல் இப்போது இவர்களுக்கும் மிகவும் தேவையானதொன்றாக மாறிவிட்டது.

வரும் ஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்கள் முக்கியமானதொரு பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இது நல்லதா கெட்டதா யாருக்கு சாதகமானது யாருக்கு பாதகமானது என்பதற்கு அப்பால் போர்க்குற்றங்கள் என்ற விவகாரத்தின் மீதான விழிப்பை ஏற்படுத்தச் செய்துள்ளது என்பதே முக்கியமானது.

மேற்குலகின் கைப்பொம்மையாகத் தான் ஆட மறுப்பதால் தான் தன் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

அதற்கு உள்ளூரில் உள்ள சிலரும் துணை போவதாகவும் கடந்த வாரம் மாத்தறையில் நடந்த கூட்டம் ஒன்றில் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்குப் பின்னால் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கம் ஒழிந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது.

இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சாதகமாகி விடும் என்பதால் தான், ஜனாதிபதியாகத் தெரிவான பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையோ, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவையோ அல்லது எந்தவொரு படை அதிகாரிகளையோ போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிமன்றத்துக்கு அனுப்பமாட்டேன் என்று கூறியிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.

மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொது வேட்டபாளராக நிறுத்தப்பட்டது ஒரு மேற்குலக சூழ்ச்சி என்றும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும், அவரது குடும்பத்தினரையும் படையினரையும் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி என்றும் அரசதரப்பு அனுதாபம் தேட முனைந்தது.

இத்தகைய கட்டத்தில் அந்த முயற்சிகளை முறியடிக்க தாம் ஜனாதிபதியானால், அவர்களை அரணாக நின்று காப்பேன் என்று சத்தியம் செய்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.

ஏற்கனவே ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் கூட இதுபோன்று தான் கூறியிருக்கிறார்.

தாம் ஆட்சிக்கு வந்தால் போரை நடத்திய எந்தவொரு தற்போதைய அரசாங்கத் தலைவரையோ, இராணுவத்தினரையோ சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதுமட்டுமன்றி, ஜாதிக ஹெல உறுமயவுடன் எதிரணியின் பொது வேட்டபாளர் மைத்திரிபால சிறிசேன செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டில் கூட போர்ககுற்றங்களுக்காக எந்தவொரு நபரையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளை எதிர்ப்பேன் என்று கூறியுள்ளார்.

ஆக இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தாலும் கூட போர்க்குற்றங்கள் விவகாரத்தில் அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றங்கள் ஏதும் வரப் போவதில்லை என்பது உறுதி.

ஐ.நா. தற்போது நடத்தும் விசாரணைகளில் எவர் மீதாவது குற்றம் சுமத்தினாலும் சரி, அதற்கு அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படக் கூடிய எத்தகைய விசாரணைகளிலும் யாரேனும் போர்க்குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டாலும் சரி அவர்களைப் பாதுகாப்பதாக இப்போதைய எதிரணித் தலைவர்கள் சிங்கள மக்களுக்கு உறுதியளித்திருக்கிறார்கள்.

சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு அளிக்கும வாக்குறுதிகள் வேண்டுமானால் மீறப்படலாம். ஆனால் சிங்கள மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை அவர்களால் மீற முடியாது.

எனவே இலங்கையில் ஆட்சி மாற்றம் என்பது, போர்க்குற்றங்களுக்கும் நியாயம் தேடும் தரப்பினருக்கு எந்தவொரு வகையிலும் ஊக்கமளிப்பதாக இருக்கப் போவதில்லை.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மிகவும் இக்கட்டானதொரு சூழலில் தனது எஞ்சிய பதவிக்காலத்தை இழந்து தேர்தலை நடத்த துணிந்தாரேயானால் அதற்கு முக்கிய காரணம் தற்போது அனுபவிக்கும் இராஜதந்திர சலுகைகளை தொடர்ந்து பெறுவது தான்.

ஜனாதிபதி பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச கீழ் இறக்கப்பட்டு விட்டால் தன்னை நோக்கி குற்றச்சாட்டுகள் சுலபமாக நீட்டப்படும் என்பதை அவர் நன்கறிவார்.

அதனால்தான் எப்படியும் மூன்றாவது தடவை பதவிக்கு வந்து விட வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் இருக்கிறது.

எனவே தான் இந்தத் தேர்தலில் தோல்வியுற்றால் மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று உலகத் தமிழர் பேரவை பேச்சாளர் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆனால், இது சிங்கள வாக்காளர்களிடம் மகிந்தவுக்குச் சார்பான கருத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இதனைக் கலாநிதி தயான் ஜயதிலக போன்றவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதனால்தான் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை புலம்பெயர் தமிழர்கள் போர்க்குற்றங்கள் குறித்துப் பேசாமல் இருப்பதை உறுதிப்படுத்த எதிரணியில் உள்ளவர்கள் தமிழ் அரசியல் பிரமுகர்கள் மூலம் முயற்சிக்கின்றனர்.

எதிரணியில் உள்ள தலைவர்கள் போர்க்குற்றங்கள் குறித்து தமிழர் தரப்பிடம் இருந்து எந்தக் கருத்தும் வெளிவருவதை விரும்பாத அதேவேளை, போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உறுதியானால் பாரபட்சமின்றி தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் என்று உறுதிப்படுத்தவும் தயாரில்லை.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் போதும் என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

ஆனால் அதற்கு மைத்திரிபால சிறிசேனவின் இப்போதைய கூட்டாளியான சம்பிக்க ரணவக்க எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

ஆக போர்க்குற்றங்கள் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தமது வெற்றியைப் பாதித்து விடக் கூடாது என்பதில் மட்டும் எதிரணித் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று கருதுவதற்கில்லை.

போருடன் சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாப்பதிலும் அவர்கள் உறுதியாகவே இருக்கிறார்கள்.

இந்தப் போக்கு எதிரணியின் பொது வேட்டபாளர் தமிழர் தரப்பின் வாக்குகளை அதிகளவில் பெறுவதற்கு உதவும் என்று கொள்ள முடியாது. போர்க்குற்றங்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புகளைச் சுமந்து நிற்கின்றனர். இத்தகைய நிலையில் போர்க்குற்ற விவகாரங்கள் தமிழர்களின் வாக்குகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தவே செய்யும்.

சிங்கள மக்களிடம் இந்த விவகாரத்தை வைத்து எவ்வாறு வாக்குகளைப் பெறலாம் என்று சிந்திக்கின்ற அளவுக்கு தமிழர்களின் வாக்குகளில் அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எதிரணித் தலைவர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

அவர்கள் வெளியிடும் கருத்துக்களே அதற்குச் சாட்சி.

– சுபத்ரா

http://www.puthinamnews.com

TAGS: