நமது நாட்டுடன் நட்பாக இருப்பதாக காட்டிக் கொள்ளும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தென்னாசியாவில் இந்தியா முதன்மை சக்தியாக வளரக் கூடாது என்பதற்காகவே முதுகில் குத்தும் வகையில் இங்கே நாசவேலைகளை அரங்கேற்ற பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடமளித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் தேசப் பாதுகாப்பில் குறிப்பாக தென்னிந்தியாவின் பாதுகாப்பில் இலங்கையின் முக்கியத்துவத்தை நாம் தவிர்த்துவிட முடியாததுதான்.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் முன்னைவிட சில நல்லெண்ண சமிக்ஞைகளை மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும் அவரது செயல்பாடுகள் என்னவோ போதுமானவையா என்ற கேள்விக் குறியையே எழுப்புகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் இந்தியாவின் தேச நலன்களுக்கு எதிராக சக்திகளுக்கு இலங்கை இடம் அளித்து வருகிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வேரூன்றி இருக்கிறது.
இலங்கைக்கான பாகிஸ்தானின் தூதரகத்திலேயே ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு முழு வீச்சாக இயங்கி வருகிறது எனில் இலங்கையின் உள்நோக்கம் என்னவாக இருக்க முடியும்?
இலங்கை மற்றும் மாலத்தீவை தளமாகப் பயன்படுத்தி இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவு அமைப்புகள் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த இருநாடுகளில் இருந்தும் எளிதாக தென்னிந்தியாவை தாக்க முடியும். சீனா மட்டுமல்ல பாகிஸ்தானும் இந்த நாடுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இலங்கையில் எப்படி ‘டேரா’ போட்டு சதித் திட்டங்களை அரங்கேற்றுகிறது என்பதற்கு ஜாகிர் உசேன் வழக்கு ஒன்று மட்டுமே போதுமானது.
தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அனுப்பி வைத்த உளவாளி ஜாகிர் உசேன். தற்போது 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளான்.
ஜாகிர் உசேன் நீதிமன்றத்திலேயே, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம்தான் எனக்கு கட்டளை பிறப்பித்த தலைமையகம்..என்னை தென்னிந்தியாவுக்குள் அனுப்பி வைத்தது என்று பட்டவர்த்தமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் முடிந்த உடனே அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தை எப்படியெல்லாம் ஐ.எஸ்.ஐ. பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம் ஜாகிர் உசேன் வழக்குதான்.. அதுவும் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்களை இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது ஐ.எஸ்.ஐ.
சீனாவின் நடமாட்டமே இல்லை என்று இலங்கை வேண்டுமானால் சொல்லிக் கொண்டே இருக்கலாம்… ஆனால் உளவுத்துறை தகவல்களோ இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து விரிவாகத்தான் சொல்கிறது..
இதனடிப்படையில்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அண்மையில் இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்த போது சீனாவின் ஆதிக்கம் குறித்த இந்தியாவின் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கோத்தபாயவுடன் பல்வேறு விஷயங்களை அஜித் தோவல் விவாதித்திருந்த போது இலங்கையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் நிலைகொண்டிருப்பது குறித்த இந்தியாவின் கடுமையான அதிருப்தியைத்தான் முக்கியமாக கோத்தபாயவிடம் தெரிவித்திருந்தார் அஜித் தோவல்.
அதேபோல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஐ.எஸ்.ஐ. அமைப்பு முழு வீச்சில் இலங்கையில் செயல்படுவது குறித்தும் கோத்தபாயவிடம் அஜித் தோவல் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தென்னாசியாவில் முதன்மை சக்தியாக இந்தியா வருவதை விரும்பவில்லை. இதனால் இந்தியா பக்கம் இருப்பது போல காட்டிக் கொண்டு பாகிஸ்தானோடும் சீனாவும் மிக நெருக்கமாக இருந்து வருகிறது.
இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொள்வதும் கூட எங்கே ஈழத் தமிழருக்கான அரசியல் உரிமைகள் பற்றி இந்தியா பேசிவிடுமோ என்ற அச்சம்தான் காரணம்..
வர்த்தக உறவு என்ற பெயரில் பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்துள்ளன. விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவது அதாவது நாங்கள் இங்கே தளம் அமைத்துக் கொண்டால் ஈழத் தமிழர் பிரச்சினையை இந்தியாவால் பெரிய அளவில் எழுப்ப முடியாது என்று பாகிஸ்தானும் சீனாவும் இலங்கைக்கு உறுதி அளித்திருக்கின்றன.
இலங்கைக்குள் ஐ.எஸ்.ஐ. அமைப்பு ஊடுருவிய நாளில் இருந்தே இந்தியா எச்சரித்து வந்தது. ஆனால் ஐ.எஸ்.ஐ. அமைப்பை ஊடுருவ விட்டு தளம் அமைத்து ‘வேலை’யை காட்டத் தொடங்கிவிட்ட பின்னர் இப்போது பாகிஸ்தானியர்களுக்கு கொழும்பு விமான நிலையத்தில் வீசா வழங்கும் நடைமுறைக்கு தடை விதிக்கிறது.. அதுவும் இந்தியா கொடுத்த மிகக் கடுமையான நெருக்கடிகளுக்குப் பின்னர் என்பதையும் நினைவில் கொள்வோம்.
இதே அணுகுமுறையைத்தான் தென்னிந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி வைத்த கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் விவகாரத்திலும் இலங்கை கடைபிடித்துள்ளது. அமீர் சுபைர் சித்திக்கை இலங்கை வெளியேற்றிவிட்டது.. அதாவது மிகவும் பாதுகாப்பாக பாகிஸ்தானுக்கு அனுப்பி பதுங்க வைத்திருக்கிறது இலங்கை.
தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி சிக்கி சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜாகிர் உசேன் சொன்ன மற்றொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானில் இருந்து போதை மருந்துகள், கள்ள நோட்டுகள், தங்கம் போன்றவை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு கடல்வழியாக கொண்டுவரப்படுகிறது என்பதுதான் அந்த தகவல். அதாவது போதைப் பொருள் கடத்தலின் மையமாக, கள்ள நோட்டு புழக்கத்தின் மையமாகவும் இலங்கை உருவெடுத்திருக்கிறது.
இப்படி அனைத்து திசைகளிலும் இந்தியாவின் நட்பு நாடு என்று காட்டிக் கொண்டு முதுகில் குத்துகிற வேலையைத்தான் மகிந்த ராஜபக்ச செய்து கொண்டிருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாகவே புரிந்து கொள்ளவும் முடிகிறது. -http://www.tamilwin.com