இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் கடந்துவிட்டதாக கூறப்படும் நிலையிலும் வடகிழக்கு தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை இனங்களின் உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகின்றது.
இப்போதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுடைய நலன்கள் குறித்து,தேர்தலில் போட்டியிடும் பெரும்பான்மை வேட்பாளர்கள் இருவரும் வாய்திறக்க மறுக்கிறார்கள்.
இந்த இடத்தில் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும். காணாமல் போனவர்களுடைய நிலை என்ன? யுத்தம் நிறைவடைந்த பின்னர் படையினர் குவிப்பு எதற்காக? சமாதானம் உருவாகிவிட்டதென்றால் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் உரிமை எங்கே? மேற்கண்டவாறு இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது.
குறித்த இடது சாரி கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் 4 இடதுசாரி கட்சிகள் இணைந்து நேற்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி கேள்விகள் அவர்களினால் எழுப்பப்பட்டுள்ளது.
விடயம் தொடர்பாக குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 5 வருடங்கள் கடந்து விட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் யுத்தமே நடைபெறாத நாட்டில் பெருமளவு பணத்தை கொட்டி படையினரும், இனவாத மதம்சார் அமைப்புக்களும் அரசாங்கத்தினால் வளர்க்கப்படுகின்றது.
அவை எதற்காக வளர்க்கப்படுகின்றன என்றால் தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுடைய உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்படவும், அவர்களுக்குள்ள நெருக்குதல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்ந்தும் இருப்பதற்காகவே.
ஆனால் மறுபக்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக் கு புலம்பெயர் தமிழர்களே காரணமானவர்கள் என குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அதுவல்ல உண்மை. 60 வருடங்களாக இந்த நாட்டில் இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு காரணமானவர்கள் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பெரும்பான்மைக் கட்சிகளே.
உண்மையில் இந்த நாட்டில் யுத்தம் நிறைவடந்து சமாதானம் உருவாகி விட்டதென்றால் இந்த நாட்டில் பொருட்களின் விலை குறைந்திருக்க வேண்டும், போக்குவரத்து செலவீனங்கள் குறைவடைந்திருக்க வேண்டும், மாணவர்களுடைய கல்வி நிலை உயர்ந்திருக்க வேண்டும். மக்கள் சுதந்திரமாக நடமாடவும், ஒன்று கூடவும் வழிவகை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவை அனைத்தும் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இருந்ததை விடவும் மிக மோசமான நிலைக்குச் சென்றிருப்பதையே நாம் பார்க்கிறோம்.
அதுபோக இந்தப் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? என்பதை கூட இன்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூறவில்லை. மாறாக கூறுவதற்கு அஞ்சுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகமோசமான மற்றும் கேவலமான சம்பவம் இப்போது நடக்கின்றது. அதாவது கட்சி தாவல்கள், இப்போதெல்லாம் கிரிக்கட் போட்டிகளின் முடிவுகளை ஊடகங்களில் கேட்பது போல் மக்கள் கட்சி தாவல்கள் பற்றிக் கேட்கும் நிலையில் இருக்கின்றார்கள்.
ஆனால் ஒரு உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கட்சி தாவல்கள் ஒரு கொள்கை ரீதியான முரண்பாடுகளினால் இடம்பெறவில்லை. அவை கோடிக்கணக்கான பணத்திற்காக நடக்கின்றது.
மேற்படி இரு பெரும்பான்மை கட்சிகளினதும் கொள்ளை ஒன்றுதான். எனவே ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்திடம் முடிவு இல்லை.
ஆனால் அந்த முடிவு மக்களிடமிருந்து பெறப்பட்டு செயற்படுத்தப்படவேண்டும். அதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.மேலும் நடத்தப்பட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல பல புத்திஜீவிகள், மாணவர்கள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் ஆற்றல் மிக்க சமூகத்தை உருவாக்க கூடியவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய இறப்புக்கு நியாயம் கிடைக்கவேண்டும்.
மற்றவர்கள் என்னை மின்சாரக் கதிரையில் அமர்த்தப் பார்க்கிறார்கள். என ஜனாதிபதி கூற முடியாது. தமிழர்கள் மற்றும் சிறுபான்மை இனங்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படவேண்டும்.
படையினரின் சிறைப்பிடிப்பிலிருந்தும், இனவாத மதவாத அமைப்புக்களின் பிடியிலிருந்தும் அவர்கள் விடுபடவேண்டும். அதற்கு இடதுசாரிகளின் ஆட்சி அமைந்தால் மட்டுமே சாத்தியப்படும் அதற்காக மக்கள் எமக்கு ஒத்துழைக்கவேண்டும். என்றனர்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் நவசமாஜவாய கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, இலங்கை நவசமாஜவாய கட்சி மற்று ம் இலங்கை சோசலிச கட்சி ஆகிய 4 இடதுசாரி கட்சிகளும் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதேவேளை இடதுசாரி கட்சியின் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவவும் கலந்து கொண்டார்.
-www.tamilwin.com